விஷால் நடித்த “தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்’ ஆகிய மூன்று படங்களை ஒரே ஹீரோவை வைத்து இயக்கிய திரு, தற்போது அவருடைய நான்காவது படத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளார்.
ஆனால், இந்தப் படத்தில் விஷால் ஹீரோ இல்லை, ஜெய்தான் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா முதன் முறையாக நடிக்கிறார். கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விஷால், விக்ரம், சிம்பு ஆகியோருடன் நாயகியாக நடித்த த்ரிஷா, திருமண நிச்சயத்திற்குப் பிறகு ஒப்பந்தமாகியுள்ள படம் இது.
இப்படத்தை த்ரிஷாவின் வருங்காலக் கணவரான வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம், ஃபிலிம் டிபார்ட்மென்ட் நிறுவனத்தின் சுஷாந்த் பிரசாத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
கும்பகோணம் நகரத்துப் பின்னணியில் கிராமம் சார்ந்த ஒரு பெண்ணாக இந்தப் படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார். படத்தின் கதையை இயக்குனர் திரு சொன்னதுமே த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று நடிக்க சம்மதித்து விட்டாராம்.
திரு இயக்கிய ‘சமர்’ படத்திலும் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் இப்படத்திற்கு இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், செய்ய உள்ளனர்.
மார்ச் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.