என்னை அறிந்தால் – விமர்சனம்

Yennai Arindhaal - Gallery 2_00015 ஒரு படம் வெளிவருவதற்கு முன் எவ்வளவோ எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். அதிலும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் என்றால் கேட்கவே வேண்டாம். அஜித் நடித்து வெளி வரும் படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதைக் கேட்கவே வேண்டாம். கௌதம் மேனன் போன்ற ஒரு இயக்குனருடன் இணையும் போது அது இன்னும் அதிகரிக்கும். சாதாரண ஒரு நாளில் வெளியாகி திருவிழா உணர்வை ஏற்படுத்திய படமாக ‘என்னை அறிந்தால்’ வெளியானது. இது இயக்குனரின் படமா, ஹீரோவின் படமா என்ற கேள்வியை இந்தப் படம் அதிகமாகவே எழுப்பியிருக்கிறது. இயக்குனரின் எண்ணைத்தை திரையில் அப்படியே கொண்டு வருவதில் தேர்ந்த ஹீரோவால் மட்டுமே செய்ய முடியும். அதை அஜித் என்ற மாஸ் ஹீரோ அதிகமாகவே செய்திருக்கிறார். அதுதான் இந்தப் படத்திற்கான மிகப் பெரும் வெற்றி. ஒரு படத்தின் வலிமையைத் தாங்கிக் பிடிக்கும் சக்தி பெரிதாக இருக்க வேண்டும். அது அஜித்திடம் வலுவாகவே இருக்கிறது. எந்த விதமான காம்ப்ரமைஸும் இல்லாமல் அவர் அவராகவே இருப்பதுதான் அவருக்கான பலம். அதை அஜித் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். போலித்தனமான தோற்றத்தையும், வித்தியாசம் என்ற பெயரில் தன்னை உருக்குலைத்துக் கொள்ளாமல் ஒரு யதார்த்த மனிதன் அவன் வாழ்க்கையில் எப்படி இருக்கிறானோ அதை திரைக்கு கொண்டு வந்ததில் இயக்குனர் கௌதம் மேனனும், அஜித்தும் அத்தனை ஈடுபாட்டைக் காட்டியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. காவல் துறை அதிகாரியான அஜித், ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களைக் கடத்தி அவர்களது உறுப்புக்களைத் திருடி கோடி ரூபாய்க்கு விற்கும் அருண் விஜய்யையும், அவருடைய நெட்வொர்க்கையும் எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அந்த உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பல் அனுஷ்காவிற்கு ஸ்பாட் வைக்க அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதும், அஜித்திற்கும் அருண் விஜய்க்கும் உள்ள முன் பகை, அஜித்திற்கும் த்ரிஷாவுக்குமான காதல் என திரைக்கதையில் பல டிவிஸ்ட்டுகள், டேர்ன்கள் என கிளைமாஸ் வரை பரபரவென்று நகர்கிறது படம். ‘ஒன் மேன் ஆர்மி’ யாக சத்யதேவ் ஐ.பி.எஸ், நேர்மையான கடமை தவறாத கண்ணியமிக்க போலீஸ் அதிகாரி. இப்படி இதற்கு முன் எத்தனையோ காவல் துறை அதிகாரி கதாபாத்திரங்களைப் பார்த்திருந்தாலும், அஜித்திடம் நாம் சொன்ன மூன்றுமே முத்திரை பதிக்கிறது. அவருடைய வசீகரமான முகம் அவர் என்ன செய்தாலும் ரசிகர்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. ஆதரவில்லாத த்ரிஷாவின் காதலனாக, த்ரிஷாவின் குழந்தைக்கு பெற்றால்தான் அப்பாவா என்று இல்லாமல் அந்த சிறுமி மீது பாசம் காட்டும் அப்பாவாக, நல்ல நண்பனாக, ஆக்ஷனில் மட்டுமல்லாமல் அன்பிலும் அசத்துகிறார் அஜித். த்ரிஷாவுக்கு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தையும் விஞ்சிய ஒரு கதாபாத்திரம். அந்த ஜெஸ்ஸிகாவை விட இந்த ஹேமானிகா ‘ஹே…….’ என ஆச்சரியப்பட வைக்கிறார். வாய் பேசும் வசனத்தை விட அந்தக் கண்கள் பேசாமல் பேசுவதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. அனுஷ்கா அஜித்தைப் பார்த்து ஆச்சரியப்படும் காட்சியிலேயே நம்மையும் சேர்த்து என ஆச்சரியப்பட வைக்கிறார். அஜித்தின் ரசிகர்களுக்காகவே அமைக்கப்பட்ட காட்சிகள். அனுஷ்கா அஜித்தைக் காதலித்தாலும், அஜித்தின் த்ரிஷா மீதான காதல்தான் நம் மனதிற்குள் அதிகம் இடம் பிடிக்கிறது. நாயகனாக நடித்து வரும் அருண் விஜய், ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையை இயக்குனர் காப்பாற்றியிருக்கிறார். வில்லன்கள் என்றால் அந்தக் காலத்தில் பார்க்கவே பயமாக இருக்கும்படி காட்டுவார்கள். இன்று வில்லன்களுக்கும் தனி ஸ்டைல் தேவைப்படுகிறது. அந்த ஸ்டைலையும் அருண் விஜய் அதிரடியாகவே செய்திருக்கிறார். விவேக், சில காட்சிகளில் மட்டும் வந்து சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘அதாரு இதாரு…’ பாடல் அஜித் ரசிகர்களையும், ‘இதயத்தை ஏதோ..’ பாடல் மற்ற ரசிகர்களையும் அதிகம் கவரும். டான் மெக்கர்தரின் ஒளிப்பதிவு தமிழ் சினிமாவுக்கு புது ரகம், எடிட்டிர் ஆண்டனியை நிறையவே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். திரைக்கதை அமைத்திருக்கும் விதம் கொஞ்சம் குழப்புவது என்பது உண்மை, நேரடியாகக் கதை சொல்லும் விதத்தை அமைத்திருந்தால் இன்னும் அதிகம் ரசிக்க வைத்திருக்கும். ‘என்னை அறிந்தால்’ – எல்லாருக்குமான படம்…  

Read Previous

‘எலி’யாக வருகிறார் வடிவேலு…

Read Next

ஜெய்க்கு ஜோடியான த்ரிஷா…

Most Popular