கின்னஸ் சாதனை புரிந்த ‘மானாட மயிலாட’…

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மானாட மயிலா’ நடன நிகழ்ச்சி, உலகின் மதிப்பிற்குரிய விருதான கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.

‘அமெஸ் ரூம் இல்யூஷன்’ (Ames Room Illusion), அடிப்படையில் அமைந்த மிகப் பெரிய அரங்கினுள் இந்த சாதனையை ‘மானாட மயிலாட’ குழுவினர் புரிந்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்கள்.

திரைப்பட இயக்குனர் கலா இயக்கி வரும் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நடனப் போட்டியில் பங்கு கொண்ட 6 நடன ஜோடிகள் அந்த அரங்கினுள் நடனமாட இந்த சாதனையை புரிந்திருக்கிறார்கள்.

‘அமெஸ் ரூம் இல்யூஷன்’ என்பது ‘இருக்கு, ஆனா, இல்லை’ என்ற அடிப்படையில் வெவ்வேறு அளவுகளில், கோணங்களில் ஒரு அறைக்குள் உருவாக்கப்படும் அரங்க அமைப்பு. ஒவ்வொரு பக்கங்கள், முனைகள் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத அளவுகளில் அந்த அரங்கம் இருக்கும்.

‘மானாட மயிலாட’ சாதனைக்காக 4000 கன சதுர அடியில் ஒரே ஒரு கதவு மூலம் நுழைந்து, ஒரே ஒரு சாதாரண லென்ஸ் கொண்ட காமிரா மூலம் படம் பிடிக்கப்பட்டு, சுமார் 40 நிமிடம் நடனமாடி அந்த சாதனையை படமாக்கியிருக்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் இதற்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் லண்டனிலிருந்து வந்த கின்னஸ் குழுவினரின் முன்னிலையில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு அளவும் மிகவும் துல்லியமாக, சிறிதும் மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாதனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். நடனமாடுபவர்கள் யாரும் சிறு தவறு கூட செய்யக் கூடாது, என்ற பல்வேறு சவால்களுடன் இந்த கின்னஸ் சாதனையை ‘மானாட மயிலாட 10’ குழுவினர் கலா மாஸ்டர் இயக்கத்தில் நிகழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார்கள்.

உலகத்திலேயே இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

வரும் மே 3ம் தேதி இரவு 7.30 மணிக்கு இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

பேய் வேடத்தில் ராய் லட்சுமி…

Read Next

ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் ‘உத்தம வில்லன்’…

Most Popular