கமல்ஹாசன், தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே கொண்டாடும் ஒரு கலைஞன். அவர் நடிக்கும் அல்லது இயக்கும் படங்களைப் பற்றி எப்போதுமே ஒரு பேச்சு இருக்கும்.
அவற்றை ‘ஆர்ட் பிலிம்’ என்று சிலர் தேவையற்று விமர்சிப்பதும் உண்டு. ஆனால், ‘ஆர்ட் பிலிம்’ என்றெல்லாம் எதுவுமில்லை என கமல்ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“ஆர்ட் பிலிம் என்று எதையும் அழைக்க முடியாது. நாங்கள் உருவாக்கும் அனைத்துமே மக்களுக்காகத்தான் அதுவும் வியாபாரத்திற்காகத்தான் உருவாக்கப்படுகிறது. எண்ணற்ற முதலீடு திரைப்படங்களில் செய்யப்படுகிறது. மக்கள் அவற்றைப் பார்த்து எங்களைப் பாராட்ட வேண்டும் என்றே படங்களை எடுக்கிறோம்.
இந்தியாவில் தற்போது படங்களை வெளியிடுவதே பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் பலர் படங்களைத் தடை செய்ய முயல தயாராக இருக்கிறார்கள்.
இது ஒரு குடியரசு நாடு, ஒவ்வொருவருக்கும் அவர்கள் நினைப்பதை, பேசுவதை வெளிப்படுத்த உரிமை உண்டு.
இந்தியாவில் 75 சதவீத இந்துக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய சென்டிமென்ட்டை காயப்படுத்த நான் என்ன முட்டாளா ?. அனைத்து மதத்தினரும் என்னுடைய படத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் நினைப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
‘உத்தம வில்லன்’ படம் நிச்சயம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும்,” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.