‘நேற்று இன்று, இரவும் பகலும்’ உள்ளிட்ட படங்களைப் பெரிய அளவில் வெளியிட்ட நிறுவனம் S. தணிகைவேல்-ன் ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ். RSSS PICTURES.
இந்த நிறுவனம் தற்போது ‘மதுரை மா வேந்தர்கள்’ என்ற படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தை வி.கே.விஜய்கண்ணா இயக்க அஜய், அர்ச்சனா, அப்புக்குட்டி, ‘காதல்’ சுகுமார், தேவதர்ஷினி, விஜய் ஆனந்த், P. பாண்டு, ‘பூ விலங்கு’ மோகன், ‘நெல்லை’ சிவா, ‘மேனேஜர்’ கிருஷ்ண மூர்த்தி, வெங்கல் ராவ், சபர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
“நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் தன் மகளின் திருமணத்திற்காக வீட்டை விற்று வைத்திருந்த பணத்தை ஒரு அரசியல்வாதியிடம் கொடுத்து ஏமாந்து விடுகின்றார்கள். அந்த பணத்தை எப்படி கதாநாயகனும் அவனது நண்பர்களும் மீட்டெடுத்தார்கள் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் வி.கே.விஜய் கண்ணா.
இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி கோவளம் கடற்கரையில் உள்ள ஒரு சிறு மணல் தீவில் படமாக்கப்பட்டது. அந்தத் தீவை அடைவதற்கு படகில் செல்ல வேண்டும். அப்படி படகில் செல்லும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுவில் தத்தளித்தது. அலையின் வேகத்துக்கு படகு கடலுக்குள் இழுத்துச் செல்ல படகில் இருந்த அனைவரும் பதற, நாயகி மயங்கி விழுந்தார். அதன் பின் மீட்புக் குழுவினர் வந்து படகை சரிசெய்து அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மதுரை வேந்தர்கள் கடலைப் பார்த்திருக்க மாட்டார்கள். பல்லவ மன்னர்களுக்குத்தான் கடற்படையும் பிரம்மாண்டமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ, மதுரை மாவேந்தர்களை கடல் கொஞ்சம் மிரட்டி விட்டது.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மே மாதம் படம் திரைக்கு வருகிறது.