சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.
படத்தின் டிரைலரை இயக்குனர்கள் ராஜேஷ், கௌதம் மேனன் வெளியிட்டனர். இசையை சிம்பு, ஆர்யா வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு மிகவும் உருக்கமாகப் பேசினார். ஒரு கட்டத்தில் அவர் அழுகிறாரோ என்று கூட சந்தேகம் ஏற்பட்டது. அவர் பேசிய பத்து நிமிடமும் அவரது பேச்சை அனைவரும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களா எந்த ஒரு விழாவுக்கும் போகவில்லை. கடைசியாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசை’ படத்தின் இசை வெளியீட்டிற்குத்தான் போயிருந்தேன்.
சந்தானத்தை நான் அறிமுகப்படுத்தியதாக பலரும் பேசி வருகிறார்கள். என்னைப் பார்க்கும் சிலர் கூட ‘சந்தானத்தை நீங்கதான் அறிமுகப்படுத்தனீங்க, இப்ப இவ்வளவு பெரிய ஆளாகிட்டாரு’ எனச் சொல்வார்கள். நான் அவரை அறிமுகப்படுத்தினேன் என்று சொல்வதை விட அவரது திறமையை கண்டறிந்து அங்கீகரித்தேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும். ‘மன்மதன்’ படத்தில் அவரை அறிமுகப்படுத்திய போதே அவர் பெரிய காமெடியனாக வருவார் என்று சொன்னேன்.
எனக்கென்று எந்தத் திறமையும் கிடையாது, எனக்குள் இருக்கும் அந்த அங்கீகரிக்கும் திறமையை உருவாக்கியதும் என்னுடைய அப்பாதான்.
என் படங்கள் வெளிவந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. இந்த காலகட்டத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். நான் ஆன்மீகத்தில் மூழ்கி விட்டேன் என்று சொல்கிறார்கள். நான் கடவுளைத் தேடித்தானே போனேன், ஃபிகரைத் தேடிப் போகவில்லையே.
சாதாரண மனிதர்கள் கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னை எந்தக் கஷ்டமும் இல்லாமல் வளர்ந்தவன் என்று சொல்வார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக நானும் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்.
இந்த இரண்டு ஆண்டுகளில என்னை விட்டு எல்லாமே போய்விட்டது. சம்பாதிப்பதற்கும் படம் வரவில்லை. சம்பாதித்தால் அம்மாவிடம்தான் கொண்டு போய் கொடுப்பேன். ஆனால், செலவுக்குக் கூட அம்மாவிடம் காசு கேட்க கஷ்டமாக இருந்தது.
சரி நமக்கென ஒரு பெண் இருக்கிறாள், குழந்தை பிறந்தாள், அந்த குழந்தை முகத்தைப் பார்த்தாவது நமது கஷ்டம் போய்விடும் என்று நினைத்தேன். அந்தப் பெண்ணும் என்னை விட்டுப் போய்விட்டாள்.
எல்லாம் என்னை விட்டுப் போனாலும் என்னிடம் உயிர் மட்டும் இருந்தது. ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உயிரை கடவுள் எனக்காக வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.
கௌதம் மேனன் என்னை வைத்து படம் இயக்கிக் கொண்டிருந்த போது அஜித் படத்தை இயக்கப் போய்விட்டார். அப்போது அப்பா கொஞ்சம் வருத்தப்பட்டார். ஆனால், அப்பாவிடம் நான் எப்படியும் முன்னேறிவிடுவேன் என்று அஜித் சொன்னார்.
என்னை என் ரசிகர்கள் எப்போதுமே தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல படமே இல்லையென்றாலும் மீடியாக்கள் என்னைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘வாலு’ படத்திற்கு சிக்கல் வந்ததும் இப்போது என்னுடைய அப்பாவே படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
நாம் செய்யும் ஏதாவது ஒரு நன்மை நம்மை எப்போதாவது காப்பாற்றும். நமக்காக வாழுவதைவிட மற்றவர்களுக்காக வாழ்ந்தால் நன்றாக இருப்போம் என்பதை இந்த இரண்டு வருடத்தில் புரிந்து கொண்டேன்,” என சிம்பு மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினார்.