வித்தியாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ ஆகிய திரைப்படங்களை ஜூன் 19ஆம் தேதி ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது.
N.J. ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ படம் ஒரு புதிதான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவை திரைப்படம். நான்கு போலிஸ்காரர்கள் தங்கள் வேலையை தக்க வைக்கச் செய்யும் பல தந்திரங்களைப் பற்றி நகைச்சுவையாக இந்தப் படம் விவரிக்கிறது.
பிரம்மா .ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம், தேசிய விருது பெற்ற ஒரு படம் என தனி அடையாளத்தைப் பெற்றுள்ளது. எனினும் விருதுகளை வெல்லும் ஒரு சராசரி கலைப்படமாக இல்லாமல். விறுவிறுவென நகர்ந்து செல்லும், நெஞ்சை படபடக்க வைக்கும், ஆழ்ந்த சமூகக் கருத்துடன் கூடிய ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம்.
“ நல்ல திரைப்படங்களை வரவேற்று ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ மற்றும் ‘குற்றம் கடிதல்’ ஆகிய இரண்டு நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை ஜூன் 19 ஆம்தேதி வெளியிடுகிறோம்,” எனக் கூறுகிறார் J. சதிஷ் குமார்.