பானு பிக்சர்ஸ் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் ஜி.வி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘54321’. கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஜி.ஆர். அர்வின், ஷபீர், பவித்ரா, ரோகிணி, ரவிராகவேந்திரா, ஜெயகுமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் டிரைலரை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.
விழாவில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும் போது, “எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு வந்தேன். ‘54321’ படத்தின் டிரைலரையும் பாடலையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் படமோ என்று நினைத்தேன். அவ்வளவு அற்புதமாக முதிர்ச்சியுடன் இருந்தது.
காட்சிகளைப் பார்த்த போது இதில் நடித்த நடிகர்கள் பெரிய அளவுக்கு வளர வேண்டும் என எனக்குத் தோன்றியது. நாங்கள் நாலைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறோம். பத்து கதாநாயகர்கள், பத்து கதாநாயகிகள் வந்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது, பிரச்சினை இருக்காது. இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
சினிமாவில் நடிகர்களில் இரண்டு ரகத்தினர் இருக்கிறார்கள். சினிமாவை காக்கும் நடிகர்கள் ஒரு ரகம், சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இன்னொரு ரகம், இப்படி இருக்கிறது சினிமா. இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களைக் காக்கும் நடிகர்களாக இருக்க வேண்டும். இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்,” என்று டி.சிவா பேசினார்.