தமிழ்நாட்டில் வசூல் ஸ்டாராக இருந்து வரும் விஜய் தற்போது தெலுங்கிலும் வசூல் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.
2014ம் ஆண்டு பொங்கலன்று வெளிவந்த விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த ‘ஜில்லா’ திரைப்படம் கடந்த 24ம் தேதி தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியானது.
வெளியான முதல் நாளிலேயே படம் அமோக வசூலைக் குவித்து இதுவரை 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெலுங்குத் திரையுலகினர் சொல்கிறார்கள். அதில் வினியோகஸ்தர்களின் பங்குத் தொகையாக மட்டும் 2.5 கோடிக்கும் மேல் கிடைத்துள்ளதாம்.
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டிநேசன் இயக்கத்தில் உருவான ‘ஜில்லா’ தமிழில் வெற்றி பெற்றதை போல தெலுங்கிலும் வெற்றி பெற்றதையடுத்து, இதற்கான ‘சக்சஸ்மீட்’ தெலுங்கு பத்திரிகையாளர்கள் முன் நடத்தப்பட்டது. அதில் தயாரிப்பாளர் ஆ.பி.சவுத்ரி, ஆர்.டி.நேசன், மற்றும் தெலுங்கு விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆர்.டி.நேசன், “தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான விஜய்யும், கேரளாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலும் இணைந்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும், கேரளாவிலும் பெரிய வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் ஆந்திராவிலும் பெரிய ஓபனிங் மற்றும் வசூலை உருவாக்கியிருக்கிறது.
முதலில் 350 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலேயே மேலும் 50 தியேட்டர்களில் வெளியானதை குறிப்பிட்டாக வேண்டும். ‘பாகுபலி’ வெளிவந்து மக்கள் அதற்கு பேராதரவு கொடுத்து வரும் இந்த நேரத்திலும், விஜய் மற்றும் மோகன்லாலின் ‘ஜில்லா’ படத்திற்கும் இத்தனை திரையரங்குகள் ஒதுக்கி ரசிகர்களை மகிழ்வித்த தியேட்டர் அதிபர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
பொதுவாக தமிழிலிருந்து தெலுங்குக்கு செல்லும் டப்பிங் படங்கள் ஒரு வாரம் ஓடினாலே பெரிய விஷயம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் விஜய்யின் ஜில்லா ஒரு வாரத்தைத் தாண்டியும் ஓடும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஆர்.டி.நேசன். அதற்கேற்றார் போல ஆந்திராவில் நேரடி திரைப்படத்திற்கு எந்தளவுக்கு விளம்பரம் செய்வார்களோ, அந்தளவுக்கு விளம்பரமும் செய்யப்பட்டு வருகிறது.
‘ஜில்லா’ படப்பிடிப்பு நேரத்திலேயே விஜய்க்கு மேலும் ஒரு கதையைச் சொல்லி, அவரால் ‘வெரிகுட்’ வாங்கியிருக்கும் ஆர்.டி.நேசனுக்கு, ஜில்லாவின் தெலுங்கு டப்பிங் படத்தின் வெற்றி ஆந்திராவிலும் முன்னணி ஹீரோக்களின் கதவை திறந்து விட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.