தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தல் நாளை மறுநாள் சென்னையில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திரையுலகில் உள்ள சங்கங்களில் தலைமைக்கும் நிர்வாகப் பதவிகளுக்கும் பிற மொழி அல்லாதவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அவர் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை மட்டுமல்ல தென்னிந்தியத் திரையுலகத்திற்கே, சினிமா இந்தியாவில் உருவான காலத்திலிருந்தே சென்னை தான் தலைமையிடமாக இருந்து வந்தது.
அப்போதிலிருந்தே பிற மொழி பேசுபவர்கள் சென்னைக்கு குடி பெயர்ந்து வந்துவிட்டனர். இன்று சென்னையில் வசிக்கும் பல பிற மொழிக் கலைஞர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பே சென்னையில் குடியேறியவர்கள்தான்.
அப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது திடீரென தென்னிந்திய நடிகர் சங்கத்தை பிரிப்பது சாத்தியமான ஒரு செயலா என யோசித்துப் பார்க்க வேண்டும். தேவைப்படும் போதெல்லாம் பாரதிராஜா போன்ற முக்கிய படைப்பாளிகள் அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு ஒதுங்கிப் போவது சரியல்ல.
சரத்குமார் அணியிலும், விஷால் அணியிலும் பிற மொழி பேசுபவர்களும் போட்டியிடத்தான் செய்கிறார்கள்.
ஒரு அறிக்கையில் மட்டுமே இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. அதிலும் தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு அறிக்கை தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் என்பது பாரதிராஜா போன்ற மூத்தவர்களுக்குத் தெரியாதா என்ன ?.
சுதாகர், விஜயன், ரதி அக்னிஹோத்திரியிலிருந்து நானா படேகர், அர்ஜுன், காஜல் அகர்வால், கார்த்திகா வரை பாரதிராஜாவின் இயக்கத்தில் எத்தனையோ பிற மொழி நடிகர்கள் நடித்திருக்கிறார்களே, அப்போதெல்லாம் எங்கே போனது அவரது தமிழ்ப் பாசம் என்கிறார்கள் சிலர்.
பாரதிராஜாவின் இந்த திடீர் அறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.