விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன், நாயகன் விக்ரம், ஃபாக்ஸ் ஸ்டார் சிஓஓ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
டீசர், டிரைலர் ஆகியவற்றைப் பார்க்கும் போது இந்தப் படம் ஒரு முழுமையான ஆக்ஷன் படம் போலவே தோன்றியது. நேற்று அது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது படத்தின் இயக்குனர் விஜய் மில்டன்,” இந்தப் படம் ஒரு காதல் படம்தான். காதலிக்காத இருவருக்கிடையில் எப்படி காதல் வருகிறது. அவர்கள் வாழ்வில் நிகழும் சில குறுக்கீடுகள், அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இது ஒரு பயணக் கதை. விக்ரம் படத்தில் கார் டிரைலவராக நடிக்கிறார். இங்கிருந்து நேபாளம் வரை கதை பயணிக்கிறது. மிகவும் திருப்திகரமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன், அனைவருக்கும் படம் பிடிக்கம் என்று நம்புகிறேன்,” என்றார் இயக்குனர் விஜய் மில்டன்.
படத்தில் தனக்குப் பிடித்த பத்து விஷயங்களைப் பற்றி ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுப் பேசிய விக்ரம் கடைசி இரண்டு விஷயங்களை மட்டும் படம் வெளியான பின் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
நடிப்புக்காக கடுமையாக உழைப்பவர், நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் விக்ரம் என ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டினார்.
இப்படம் அக்டோபர் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.