‘கோலி சோடா’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்க ‘10 எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கினார்.
கடந்த மாதம் வெளிவந்த இந்தப் படம் பெரிய வரவேற்பையோ, வசூலையோ குவிக்கவில்லை. விக்ரம், சமந்தா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மிகச் சுமாரான ஒரு படத்தை விஜய் மில்டன் கொடுத்துவிட்டார் என்று விமர்சகர்கள் பலரும் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர்.
அந்தப் படத்துடன் வெளிவந்த ‘நானும் ரௌடிதான்’ படம் பெரிய வரவேற்பையும் பெற்று, வசூலையும் குவித்து வருகிறது. பாக்ஸ் ஆபீஸிலும் படம் பெரிய வெற்றி என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனாலும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறார் விஜய் மில்டன்.
“175 திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து விமர்சகர்களுக்கும் சேர்த்து படம் பண்றோம்,” என சற்று முன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
‘கோலி சோடா’ படம் பெரும் வெற்றி பெற்றதில் மீடியாக்களின் விமர்சனங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அப்போது மீடியாக்களைப் பெரிதும் வரவேற்ற விஜய் மில்டன், இப்போது ‘10 எண்றதுக்குள்ள’ படத்திற்கு எழுந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளாமல் கிண்டலடிக்கும் விதத்தில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.