சிம்புவை நாயகனாக வைத்து படம் தயாரித்தவர்களும், படம் இயக்குபவர்களும் அவருடைய ‘நேரம் தவறாமை’ பற்றி நிறையபே பேசுவார்கள்.
இதற்கு முன்னால் பேசியவர்கள் எப்படியோ, ஆனால், கௌதம் மேனன் மிகவும் நேர்மையாக சிம்புவின் ‘நேரம் தவறாமை’ பற்றி பேசியிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
ஒரு வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்தான் அந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார்.
“தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் இந்தப் படத்தை எடுக்கிறோம். அப்புறம் சிம்பு வேற. அதற்கான பதில் என்னவென்று உங்களுக்கே தெரியும்,” என்றும்,
“அவர் நான்கு மணி நேரம் ஷுட்டிங்குக்கு தாமதமாக வந்தால் கூட, தன் நடிப்பால் அந்த டென்ஷனை எல்லாம் மறக்கச் செய்துவிடுவார். ஆனால், இந்த அணுகுமுறை எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியாது,” என்று இரு வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அதோடு, ‘எனக்கும் சிம்புவுக்குமான உறவு ஷுட்டிங் ஸ்பாட்டுடன் முடிந்துவிடும். அதற்குப் பிறகு அவருடைய வாழ்க்கை, அவரது ஈடுபாடு எதிலுமே நான் இல்லை. ஒருவேளை இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. அப்படி அவர் அனுமதித்திருந்தால் நாம் ஏதாவது எடுத்துச் சொல்லி அவரை இன்னும் மேலே கொண்டு வந்திருக்கலாம் என்று விரும்பியதுண்டு. ஆனால், அவருக்கு என்று ஒரு வட்டத்தை அவர் வைத்திருக்கிறார். அந்த வட்டத்தில் நாம் வலியப் போய் நுழைய முடியாது. அவர் அதை விரும்ப வேண்டும்,” என்றும் சொல்லியிருக்கிறார்.
சிம்பு, ரன்வீர் கபூர் மாதிரி வரவேண்டியவர் என்று பலமுறை அவரிடம் சொல்லியிருப்பதாகவும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
சிம்புவுடன் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தையும், தனுஷுடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும் மாறி மாறி எடுத்து வருகிறார் கௌதம் மேனன்.
இதில் எந்தப் படம் முதலில் வரப் போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.