மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த கோவை சரளா

தமிழ்த் திரையுலகின் சீனியர் நகைச்சுவை நடிகையான கோவை சரளா நேற்று கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

அக்கட்சி சார்பில் நேற்று மகளிர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கோவை சரளா பேசுகையில்,

“மக்கள் நீதி மய்யம் விரைவில் மகளிர் நீதி மய்யம் ஆக மாறிவிடும். அவ்வளவு மகளிர் இங்கு வந்திருக்கிறார்கள். இது இன்னும் அதிகமாக வேண்டும்.

இனிமேல், பெண்கள் நாட்டின் கண்கள் ஆக இருக்க வேண்டும். சக்தி இல்லையேல் சிவம் இல்லை. ஆண், பெண் இணைந்து செயல்பட்டால் இந்த நாடு நலம் பெறும் என்பது உறுதியானது.

சினிமாவில் நடிக்கிறவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து என்ன செய்யப் போகிறார்கள் என்று சொன்னார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்குத்தான் மக்களின் உண்மையான மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்தந்த கதாபாத்திரங்களாக நடிக்க மாறும் போது அதற்கேற்ற மனநிலைக்கு நடிகர்கள் மாறுவோம். அது போல தமிழ்நாட்டில் மக்களின் மனநிலை என்னவென்பது கலைஞர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இன்றுதான் அரசியல் மேடையில் பேசுகிறேன். இது போகப் போக ஜெட் வேகத்தில் போகும்.

ஏற்கெனவே தலைவருக்கு உறுதி கொடுத்திருந்தேன். நீங்கள் எங்கே சென்றாலும், அங்கே உங்கள் பின்னால் நாங்கள் பல பேர் இருப்போம் என்று அவரிடம் தெரிவித்திருந்தேன். அதனால்தான், இன்றைக்கு அவர் செல்லும் பாதையில் நாங்கள் செல்லத் தயாராக இருக்கிறோம், இது கடைசி வரை இருக்கும்,” என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் தின கொண்டாட்டத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீப்ரியா, சென்னை மண்டல பொறுப்பாளர் கமீலா நாசர் உள்ளிட்டவர்கள் மற்றும் மகளிர் பலர் கலந்து கொண்டனர்.

Read Previous

‘கடாரம் கொண்டான்’ – விக்ரம் பாடிய பாட்டு

Read Next

புதுப் பொலிவுடன் விஜய் சூப்பர் டிவி

Most Popular