புதிய கதைக் களத்துடன் ‘தப்பு தண்டா’

நாட்டில் தேர்தல் என்றாலே ‘காசுக்கு ஓட்டு’ என்ற விஷயமும் பேசப்படும். அதிலும் இடைத் தேர்தல் என்றால் கேட்கவே வேண்டாம். அந்தத் தொகுதி மக்கள் நல்ல வசதி வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று கூறுவார்கள்.

அரசியலை மையமாக வைத்தும், தேர்தலை மையமாக வைத்தும் தமிழில் சில படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், தேர்தல் சமயத்தில் ‘பணம் பட்டுவாடா’ செய்யப்படுவதை வைத்து இதுவரை எந்தப் படமும் வரவில்லை. அதை மையமாக வைத்து தற்போது எடுக்கப்பட்டு வரும் படம்தான் ‘தப்பு தண்டா’.

‘கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து இருக்கும் ‘தப்பு தண்டா’ படத்தில் சத்யா – சுவேதா கய் முன்னணி கதாபாத்திரங்களிலும், மைம் கோபி, ஜான் விஜய், அஜய் கோஷ், ஈ ராமதாஸ், மெட்ராஸ் ரவி, மகேந்திரன், நாகா, சஞ்சீவி, அஷ்மிதா பிரியா, ஜீவா ரவி மற்றும் ஆத்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

நகைச்சுவை – கிரைம் கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வரும் ‘தப்பு தண்டா’ படத்தை பாலு மகேந்திராவிடம் பயின்ற ஸ்ரீகண்டன் இயக்கியுள்ளார்.

“தேர்தல், நான்கு திருடர்கள், கதாநாயகியின் காதல் என மூன்று வெவ்வேறு கதைக் களங்களை கொண்டு தான் எங்களின் ‘தப்பு தண்டா’ திரைப்படம் நகரும். முதல் பாதியை நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதியை கிரைம் கலந்த திகிலாகவும் உருவாக்கி இருக்கிறோம்.

இப்டத்தின் முக்கியமான சிறப்பம்சமே ஜான் விஜய் சாரின் கதாபாத்திரம் தான். முதல் முறையாக, திருடர்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தின் நிறுவனராக அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

திருட்டுத் தொழிலில் இணைய விருப்பப்படும் இளைஞர்களை படிப்படியாக முழு நேர திருடனாக்குவது தான் அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியமான குறிக்கோள். அதேபோல் அஜய் கோஷ் சாரின் கதாபாத்திரமும் ‘தப்பு தண்டா’ படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

படத்தின் கதை பல்வேறு பரிமாணங்களில் செல்வதற்கு அவருடைய கதாபாத்திரம் தான் பாலமாக இருக்கும். ‘விசாரணை’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயமாக அணைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும்.

கூத்து பட்டறையில் இருந்து உதயமான எங்கள் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் சத்யமூர்த்தி, ‘தப்பு தண்டா’ படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இருக்கிறார். மற்ற எல்லா நகைச்சுவை கலந்த திகில் படங்களில் இருந்தும் ‘தப்பு தண்டா’ திரைப்படம் தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன்.

Read Previous

மகள்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி, கமல்

Read Next

‘தர்மதுரை’ படத்திற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

Most Popular