‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குனர் கே.வி.ஆனந்த், சூர்யா இணைந்துள்ள மூன்றாவது படம் ‘காப்பான்’.
ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் இந்த வாரம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகிறது.
படத்தின் சிறப்புகள் பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது,
1987, 88 கால கட்டங்களில் நாவல் ஆசிரியர்களான சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுதிய நாவல்களுக்கு அட்டைப்பட புகைப்படங்கள் எடுத்து கொடுத்திருக்கிறேன்.
இயக்குனர் ஆன பிறகு சுபா அவர்களுடன் இணைந்து பல படங்கள் பணியாற்றினேன். பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்த போது இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களின் சாகசம் ஆகியவற்றைப் பற்றிய கரு ஒன்று கிடைத்தது.
‘அயன், மாற்றான்’ படங்களில் என்னுடன் இணைந்த சூர்யாவிடம் ‘காப்பான்’ கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடிக்கவே இப்படம் ஆரம்பமானது.
பிரமதராக மோகன்லால், அவருடைய பாதுகாப்பு சிறப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். அவர் பிரதமரைக் காப்பாற்றுகிறாரா, வேறு சதி செய்கிறாரா, கொலை செய்ய நினைக்கிறாரா, தனது உயிரை விடவும் தயாராக இருக்கிறாரா என பல கோணங்களில் இந்தக் கதை நகர்கிறது.
இப்படத்திற்காக டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புப்படை பிரிவில் துப்பாக்கி சுடுதல், உடற்பயிற்சி உள்ளிட்ட சில பயிற்சிகளை சூர்யா மேற்கொண்டார்.
போலீஸ், மிலிட்டரி வேலைகளும், தேசிய பாதுகாப்புப் படை பணியும் வெவ்வேறானாவை. இவர்கள் யாருடைய அதிகாரத்திற்கும் கட்டுப்படத் தேவையில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம்.
போலீஸ், மிலிட்டரி, எல்லை பாதுகாப்புப் படை ஆகியவற்றில் பணியாற்றும் திறமையான, விசுவாசமான வீரர்களை பல கட்ட தேர்வுக்குப் பின் இந்த பாதுகாப்புப் பிரிவுக்குத் தேர்வு செய்வார்கள்.
த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தின் கதை இருக்கும். இப்போதெல்லாம் படம் பார்க்க வருபவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். திரைக்கதை வேகமாகப் போக வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கேற்பட இந்தப் படத்தில் காட்சிகளை வைத்திருக்கிறேன்.
மோகன்லால் வித்தியாசமான ஒரு நடிகர். சினிமா மீது அவ்வளவு காதல் இருப்பதால்தான் இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார். ரொம்பவும் இயல்பாக நடிப்பார். மிகவும் டெடிகேஷனாக நடிப்பார்.
இப்படத்தில் சமுத்திரக்கனி சூர்யாவுன் பணிபுரியும் சக அதிகாரியாக நடிக்கிறார். ஆர்யாவும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரசிகர்களுக்கும் எனக்கும் செட்டாகவில்லை என்று தெரிந்தால் சினிமாவை விட்டு வேறு வேலைக்குப் போய்விட வேண்டும் என்பது என் பாலிசி,” என்கிறார்.