எம்டிபிசி கிரியேஷன்ஸ் அன்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரவீண்குமார் இயக்கத்தில் சன்னி டான் இசையமைப்பில், ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் அம்பு’.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ஆரி, பிஆர்ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி, செயலர், பெருதுளசி பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.
நடிகர் ஆரி பேசும் போது,
இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும்.
இரண்டு மூன்று நாட்களாக, கவின் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம் தான். யாருக்கோ வைத்த பேனர், அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார்.
இந்த விபத்திற்குப் பிறகு திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன். அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன்.
அதேபோல், சினிமாத்துறை சார்ந்தவர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்கக்கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும்,” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில்,
“இயக்குநர் பிரவீன் வெளிப்படையாக பேசினார். ஆள் பார்க்க சிறிய பையனாக இருந்தாலும், சினிமா அறிவு நிறைய இருக்கிறது. ‘இன்று போய் நாளை வா’, ‘காதலிக்க நேரமில்லை’ என்று காதலை நகைச்சுவையாகக் கூறிய படங்கள் வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல், இப்படமும் வெற்றியடையும்.
இப்போது எந்த காரணமாக இருந்தாலும் மது அருந்துவது தான் இப்போதுள்ள கலாச்சாரம் என்று எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது. ஆகையால், இது போன்ற காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளைவிட சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு அதிகம். அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம்,” என்றார்.