ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நீண்ட நாட்களாகவே கமல்ஹாசன் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
மாணவ இளைஞர்களின் போராட்டத்தில் பிரபலங்கள் பங்கெடுத்து அதை திசை திருப்பி விட வேண்டாம் என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இன்று காலை மீண்டும் போராட்டத்திற்கு ஆதரவாக தனது கருத்துக்களை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
“இந்த உலகமே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவை தமிழர்கள் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் கொள்கையில் விடாப்பிடியாக இருங்கள்.
1930ம் ஆண்டு சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தின் கொள்கை இயற்றப்பட்டது. 2017-ல் அது மீண்டும் இயற்றப்பட இருக்கிறது. நடுநிலை அல்லாத செய்திகளை வெளியிட ஒவ்வொரு கட்சியும் தொலைக்காட்சிகளை வைத்துள்ளன என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அறிவை அப்படிப்பட்ட செய்திகளுக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வன்முறையற்ற போராட்டத்தைத் தொடருங்கள். இது மக்களால் உருவான போராட்டம்.
பிரபலங்கள் ஆதரவு மட்டுமே தெரிவிக்க வேண்டும், தங்கள் பக்கம் அதைத் திருப்பக் கூடாது என்று இன்னமும் நினைக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் எனது மக்கள் கூடியிருப்பதை செய்திகளில் பார்க்கிறேன், கண்களில் கண்ணீர் வருகிறது. நன்றி. நீங்கள் இனி மாணவர்கள் இல்லை, ஆசிரியர்கள். நான் உங்களின் ரசிகன்,” என கமல்ஹாசன் டிவிட்டரில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.