நடிகர் சங்கமே, மெரீனா நோக்கிச் செல்…

தமிழ் மக்களின் போராட்ட உணர்வு எப்படிப்பட்டது என்பதை இந்த உலகம் இப்போது புரிந்து கொண்டிருக்கும்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தோ முன் தோன்றிய மொழி என்று உலக மொழி அறிஞர்களாலும் பாராட்டப்பட்டு வருவது தமிழும், தமிழினமும் மட்டுமே.

ஜல்லிக்கட்டு என்பது தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கு, வீரத்திற்கு அடையாளமாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

மாணவர்கள், இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சாதி, மதம் பாராமல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் கலாச்சாரத்தைக் காக்கப் போராடி வருகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் போராட்டத்தின் மையக் களமாக இருக்கும் மெரீனா கடற்கரைக்குச் சென்று போராடாமல், தங்களது வளாகத்தில் பந்தலின் கீழே, கதவை அடைத்துக் கொண்டு நடிகர் சங்கத்தினர் போராடி வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யாரும் வந்து எங்களது போராட்டத்தை செய்தியாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நடிகர் சங்கத்தினர் மறுபுறம் நடிகர்கள் வந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் மீடியாக்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

செய்தித் தொலைக்காட்சிகளில் நியூஸ் 7, புதிய தலைமுறை ஆகிய இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே நடிகர் சங்க போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் புறந்தள்ளி, இளைஞர்களின், மக்களின் போராட்டங்களை இடைவிடாமல் ஒளிபரப்பி வருகிறது.

மீடியாக்களின் வெளிச்சத்தால் பதவியேற்ற தற்போதைய நடிகர் சங்கத்தினர் இப்போது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாகச் சொல்லி நான்கு சுவர்களுக்குள் போராடுவது சரியல்ல.

உண்மையிலேயே தமிழ் உணர்வுடன் இளைஞர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக நினைத்தால் மெரீனாவிற்குச் சென்று வெயிலிலும், பனியிலும், குளிரிலும் போராடிக் கொண்டிருக்கும் மக்களோடு மக்களாக உட்கார்ந்து போராடுங்கள்.

தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் புள்ளி விவரங்களுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் வெறுமனே போராட்டத்திற்கு வந்து போவது தமிழ் மக்களின் வெறுப்புக்கு ஆளாகும் செயலாகும்.

மெரீனா கடற்கரைக்குச் சென்று போராடுங்கள், இல்லை தமிழின வரலாற்றில் உங்கள் மீது விழும் ‘கறை’யைத் தவிர்க்க முடியாது.

Read Previous

பீட்டா தந்த சிறப்பு, பெரும் அவமானம் – தனுஷ்

Read Next

இனி, நீங்கள் மாணவர்கள் இல்லை, ஆசிரியர்கள் – கமல்ஹாசன் பெருமிதம்

Most Popular