சிக்னல் அட் 11 30 – விமர்சனம்

மலர்விழி நடேசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் மலர்விழி நடேசன், ஷிவானி சுப்பிரமணி ஆகியோர் தயாரித்துள்ளனர். சந்தோஷ் பிரதாப், பவ்யா ட்ரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சென்னையின் ஓஎம்ஆர் சாலையில் இரவு 11:30 மணிக்கு நடைபெறும் ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு கதை தொடங்குகிறது. அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பும் சித்தார்த் (சந்தோஷ் பிரதாப்), ஒரு சிக்னலில் காத்திருக்கும்போது இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்ணைத் துரத்துவதைப் பார்க்கிறார். இதனால் அந்தப் பெண்ணுக்கு ஏதோ ஆபத்து ஏற்படப்போகிறது என நினைத்து அவரைப் பின்தொடர்கிறார். ஆனால், அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்கிறார்.

மற்றொருபுறம், வேலைக்குச் சென்ற தனது மகள் ஹாசினி (பவ்யா ட்ரிகா) இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை மாதவன் (ஜெயப்பிரகாஷ்) பதற்றமடைகிறார். பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார். காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கும் நிலையில், ஹாசினி சித்தார்த்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவருகிறது. சித்தார்த் யார்? ஹாசினியை ஏன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? ஹாசினிக்கும் டாக்டர் தாராவுக்கும் (பூஜிதா பொன்னாடா) என்ன தொடர்பு? என்பதற்கான விடைகளே மீதிக்கதை.

சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தோஷ் பிரதாப், பல்வேறு உணர்வுகளைக் கொண்ட சிக்கலான கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். குறிப்பாக, மனதுக்குள் பல விஷயங்களை மறைத்துக்கொண்டு செயல்படும் காட்சிகளில் தனது நடிப்பால் கவனம் பெறுகிறார். பூஜிதா பொன்னாடா கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். பவ்யா ட்ரிகாவும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். தந்தையாக நடித்துள்ள ஜெயப்பிரகாஷ், மகளைக் காணாமல் தவிக்கும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முனீஸ்காந்த் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார்.

டி. இமானின் இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்கு வலுசேர்க்கின்றன. குறிப்பாக, தந்தை – மகள் உறவை வெளிப்படுத்தும் ‘ஜோ ஜோ மா’ பாடலும், காதலின் வலியைச் சொல்லும் ‘போக போக போகாதே’ பாடலும் ரசிக்க வைக்கின்றன. ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவில் இரவு நேரச் சாலைகளும், கொடைக்கானல் பகுதிகளும் அழகாகப் பதிவாகியுள்ளன. ஆர். கலைவாணனின் படத்தொகுப்பு ஒரே சம்பவத்தை வெவ்வேறு கோணங்களில் நகர்த்தும் திரைக்கதைக்கு உதவுகிறது.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ஒரு உளவியல் குற்றப் பின்னணியிலான கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மலர்விழி நடேசன். இரவு நேரத்தில் ஒரு சிக்னலில் நடைபெறும் சிறிய சம்பவம் எவ்வாறு பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையுடன் தொடர்புபடுகிறது என்பதைச் சுவாரசியமாகச் சொல்லியுள்ளார். நேர்கோட்டில் இல்லாமல் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களை இணைத்துக் கதை சொல்லியிருப்பது திரைக்கதையின் முக்கியமான அம்சம். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியும் படிப்படியாக வெளிப்படும்போது அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்கள் கவனம் பெறுகின்றன.

குறிப்பாக, தந்தை – மகள் பாசத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது படத்தின் பலம். அதேபோல், தனிமையில் வாடும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும் உணர்வுப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இருப்பினும், சில இடங்களில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகள் கதையின் தீவிரத்துக்குப் பொருந்தாமல் அமைந்துள்ளன. இறுதிக்கட்டத்தில் வரும் சில விளக்கங்களும் இன்னும் அழுத்தமாக அமைந்திருக்கலாம். குறிப்பாக, கிளைமாக்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை.

இரவு 11:30 மணிக்கு ஒரு சிக்னலில் நடைபெறும் சம்பவத்தை மையமாகக் கொண்டு உளவியல் திரில்லர், காதல், குடும்ப உணர்வுகள் எனப் பல அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்.

Read Previous

நிறம் – விமர்சனம்