தமிழ்த் திரையுலகில் இன்றைய இளம் ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத்.
தெலுங்கில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண், கீர்த்தி சுரேஷ், குஷ்பு, ஆதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத படம் மூலம் தெலுங்குத் திரையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அனிருத்.
பவன் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் பாடல் டீசர் ஒன்று வெளியிடப்பட்டது. ‘பைட்டிகொச்சி சூஸ்தே’ என்ற அந்த பாடலை அனிருத் பாடுவது போலவும், அதை இயக்குனர் த்ரிவிக்ரம் ரசித்துக் கேட்பவது போலவும் டீசரில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. டீசரின் முடிவில் பவன் கல்யாண் ஒரு சேரை சுழற்றிவிடும் காட்சிகளும் உள்ளன.
டீசர் வெளியான உடனேயே திரையுலகத்தினரையும் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அதற்குள் யு டியுபில் 30 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
தெலுங்கில் இதற்கு முன் சில படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு வந்த போது அவரால் இசையமைக்க முடியவில்லை. இருந்தாலும் பவன் கல்யாணின் படத்தின் மூலம் அறிமுகமாவது அவருக்கு அங்கு பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இந்த ஒரு டீசரைப் பார்த்துவிட்டு பாகுபலி இயக்குனர் ராஜமௌலி பாராட்டு தெரிவித்துள்ளார். “வாவ்…பவன் கல்யாணின் ஒரே ஒரு ஷாட், ஒரு சிம்பிளா மெலடியை வைத்து என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்” என அவர் பாராட்டியுள்ளார்.