‘மொட்டை’ அடித்து வியக்க வைத்த பியா பாஜ்பாய்

பி.ஆர். விஜயலட்சுமி இயக்கத்தில் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் நாயகன் நாயகியாக நடிக்கும் படம் ‘அபியும் அனுவும்’.

மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வையை சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

தமிழில் “பொய் சொல்லப் போறோம், அஜித் நடித்த ‘ஏகன்’, கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டறை, கூட்டம், நெருங்கி வா முத்தமிடாதே’ போன்ற படங்களில் நடித்த பியா பாஜ்பாய் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம் இது.

இப்படத்திற்காக மொட்டை அடித்துக் கொண்டார் பியா. பொதுவாக ஹீரோக்கள்தான் மொட்டை அடித்துக் கொள்வார்கள். ஹீரோயின்கள் அவர்களது ஹேர்-ஸ்டைல் மீது தனி கவனம் செலுத்தி அதை பராமரிப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு ஹீரோயின் படத்திற்காக
நிஜமாகவே மொட்டை அடித்து அவ்வளவு ஈடுபாட்டுன் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

அது பற்றி பியா கூறுகையில், “இக்கதையின் ஒரு பகுதிக்காக நான் மொட்டையடிக்க வேண்டும் என்று இருந்தது. அதற்கேற்ப நானும் உடனே அதை செய்தேன். கதையின் அழகுக்கு தேவையும் அது. மேலும், தோற்றத்தையும் மீறி ஒரு நல்ல நடிகை என பெயர் வாங்க முடியும் என்று நம்புபவள் நான்.

இந்தப் படமும், நான் நடித்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி அவர்கள் எனக்கு போன் பண்ணி இப்படத்தின் கதையை கூறிய பொழுது அது என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிய விஷயம். அதனாலேயே இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.

இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் அருமையானது. அவரது திறமையைக் கண்டு ரசித்துள்ளேன். படப்பிடிப்பு தளத்தை அவர் கையாண்ட விதமும், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களிடமிருந்து முழுத் திறமையையும் அவர் வெளிக் கொண்டு வந்த விதத்தை கண்டு நான் வியந்தேன்.

கதாநாயகன் டோவினோ தாமஸுடன் எனக்கு இது முதல் படம். அபாரமான நடிப்புத் திறமை உள்ளவர் அவர். அவரது தோற்றமும் நடிப்பும் இப்படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.

வரும் வாரங்களில் ரிலீஸாகவுள்ள’அபியும் அனுவும்’ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த துணிச்சலான, அழகான காதல் கதையை சினிமா ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன். தமிழ் சினிமாவின் காதல் காவியங்களின் பட்டியலில் ‘அபியும் அணுவும்’ நிச்சயம் சேரும் என்ற நம்பிக்கையோடு உள்ளேன்,” என்கிறார் பியா பாஜ்பாய்.

Read Previous

அனிருத்தைப் பாராட்டிய ராஜமௌலி

Read Next

20 கோடி செலவில் விஜய் சேதுபதி தயாரித்து, நடிக்கும் ‘ஜுங்கா’

Most Popular