விஜய் சேதுபதி நடித்த படங்களில் அவருடைய வித்தியாசமான நடிப்பை முழுமையாக வெளிக்காட்டிய படம் என்ற பெருமையைப் பெற்ற படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’.
அப்படத்தை இயக்கிய கோகுல் அதன் பின் கார்த்தி, நயன்தாரா நடித்த ‘காஷ்மோரா’ படத்தை இயக்கினார். பிரம்மாண்டமாகத் தயாரான இந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. இருந்தாலும் கோகுலுக்கு மீண்டும் தன்னை வைத்து இயக்கும் ஒரு வாய்ப்பை விஜய் சேதுபதி கொடுத்துள்ளார்.
‘ஜுங்கா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து நாயகனாகவும் நடிக்கிறார். படத்தின் பட்ஜெட் 20 கோடிக்கும் மேல் என்கிறார் இயக்குனர் கோகுல்.
‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், அவரை சந்தித்து கதையை சொல்லத்தொடங்கினேன்.
கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, இந்தக் கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியை தாண்டும். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படம். அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கிறார்.
அறுபது சதவீத படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாயீஷா ஒப்பந்தமாகியிருக்கிறார். முக்கியமான கேரக்டரில் யோகி பாபுவும் நடிக்கிறார். ‘ஆண்டவன் கட்டளை’ படத்திற்குபி பிறகு யோகி பாபு, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
முன்னணி கலைஞர்கள் பலர் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் தெரிவிக்கிறேன்.
விஜய் சேதுபதியின் மாஸ் எண்டர்டெயினராக இப்படம் இருக்கும். காமெடி ஆக்ஷன் லவ் என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது,’’ என்றார் இயக்குநர் கோகுல்.