‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் இதற்கு முன் ‘மெட்ராஸ், கத்தி’ படங்களின் கதை விவகாரத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்.
அப்போது கோபி நயினார் ஏமாற்றப்பட்டுவிட்டாரே என்ற ஆதங்கத்தில் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், பத்திரிகையாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக அவருடைய அறிக்கைகள், பேட்டிகள் என பலவற்றை வெளியிட்டனர்.
அந்தப் படங்களின் கதை விவகார சர்ச்சையில் திரை மறைவில் பல வேலைகள் நடந்தன. அதன் பின் அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது, அல்லது அடக்கப்பட்டது.
கோபி நயினார் இயக்கிய ‘அறம்’ படம் கடந்த வாரம் வெளிவந்த பின் அவர் மீது பற்று கொண்ட பலரும் படத்தைப் பாரட்டியதோடு இல்லாமல், சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக மீண்டும் ‘மெட்ராஸ், கத்தி’ சர்ச்சைகளை எழுப்பி, அந்தக் கதைகள் கோபி நயினார் கதைதான் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி என்ன வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.
கடந்த சில நாட்களாக நடந்த இந்த கருத்துப் பரிமாற்றங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பினர் விவாதத்திற்கே வரவில்லை. ஆனால், பா.ரஞ்சித் ஆதரவாளர்கள் பலரும் ‘மெட்ராஸ்’ கதை திருட்டுக் கதை அல்ல, அது ரஞ்சித் எழுதிய கதை என பதிவிட்டு வந்தார்கள்.
கோபி நயினார் உதவி இயக்குனர்கள் உட்பல அவரது ஆதரவாளர்கள் பலரும் இதற்கு முன் நடந்த கோபி நயினார் கதைத் திருட்டு பற்றி பதிவுகளைப் போட்டு வந்தார்கள்.
தொடரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோபி நயினார் வெளியிட்ட அறிக்கை என ஒன்றை பா.ரஞ்சித் தரப்பிலிருந்து சிலர் வெளியிட்டுள்ளார்கள்.
அதில் கூறியிருப்பதாவது,
“இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள்.
ஆனால் சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான
சூழலல்ல.
தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
நானும், இயக்குனர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கிறது. அதில்
குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்து செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போது தான் இந்த பலம் எல்லோரையும்
ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமைய கூடும்.
ஆதலால் உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான்
அனுமதிக்க மாட்டேன்.
நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தததை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தை
தெரிவித்து கொள்கிறேன்.
தோழமையுடன் கோபி நயினார்.
என அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
கோபி நயினாரின் இந்த அறிக்கை மீண்டும் ஒரு சர்ச்சையை இப்போது கிளப்பியுள்ளது. அவர் மனமுவந்து இந்த அறிக்கையைக் கொடுத்துள்ளாரா அல்லது சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கொடுத்துள்ளாரா என்பது கோபி நயினாருக்குத்தான் வெளிச்சம்.
ஒரு தரமான இயக்குனராக ‘அறம்’ படம் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள கோபி நயினார் அவர் மூலமாகவே ‘கத்தி, மெட்ராஸ்’ இரண்டு படங்களும் என்னுடைய கதைகள் அல்ல, அவை திருடப்படவில்லை என சொன்னால் மட்டுமே இந்த ‘திருட்டுக் கதை’ விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வரும்.
அதுவரை கோபி நயினார் நிறுத்திக் கொண்டாலும் மற்றவர்கள் நிறுத்தப் போவதில்லை.