தமிழ் சினிமாவின் ஒரே ‘ஹாட்’ ஆன காதல் ஜோடி நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த சில வருடங்களாகவே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என கிசுகிசுக்கிறார்கள்.
அதற்குத் தகுந்தாற் போல இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் மட்டுமே பதிவிடுவார் விக்னேஷ் சிவன். அவருக்கு மட்டும்தான் சமூக வலைத்தளங்களில் கணக்கு இருக்கிறது.
நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இரண்டு பதிவுகள் அவரது காதல் வாழ்க்கையில் முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அவருடைய அம்மாவுக்கு மட்டும் அன்னையர் தின வாழ்த்து சொல்லாமல் நயன்தாராவின் அம்மாவுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களைச் சொல்லியிருக்கிறார். இதிலிருந்து இவர்கள் இருவரின் காதலும் நயன்தாரா வீட்டிலும் தெரியும் என்பது உறுதியாகி உள்ளது. நயன்தாரா அம்மாவிற்கு வாழ்த்து சொல்லும் பதிவில் நயன்தாரா குழந்தையாக இருக்கும் போது அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் உள்ளிட்ட அம்மா, மகள் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
அடுத்து நயன்தாரா ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “எனது வருங்கால குழந்தைகளின் தாயின் கைகளில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.” என்று சொல்லியிருக்கிறார். இதன் மூலம் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதியாகி இருக்கிறது.
இனி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரையும் காதலர்கள் என்றே எழுதலாம். அதை விக்னேஷ் சிவன் நேற்றைய பதிவு மூலம் உறுதி செய்துவிட்டார்.