நானிக்கு நாயகியாக ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தசரா’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. இதன் படப்பிடிப்பின் போது இயக்குநருக்கும், நானிக்கும் பயங்கர பிரச்சினை உண்டானது. ஆனால், படம் தந்த பிரம்மாண்ட வெற்றியினால் இப்போது நானியின் அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் ஸ்ரீகாந்த் ஓடிலா.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தினை மையப்படுத்தி கதையொன்றை உருவாக்கியுள்ளார். சுமார் 100 கோடி ரூபாய் பொருட்செலவில் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.
இதில் நாயகியாக நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரது படங்களைத் தொடர்ந்து நானிக்கு நாயகியாகவும் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.