கொரானோ ஊரடங்கு காலத்தில் மக்கள் ஒவ்வொருவரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் முடிந்த உதவிகளை ஓடியாடி சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சினிமா சம்பந்தமான எந்த ஒரு வேலையும் நடக்கவில்லை. பல தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள், சினிமா தியேட்டர் ஊழியர்கள் என யாரும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் பெரிய அளவிலான உதவிகளையும், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, நயன்தாரா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே நிவாரண உதவிகளை வழங்கி இருக்கிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன் எந்தவிதமான நிவாரண உதவிகளையும் தனிப்பட்ட முறையில் வழங்கவில்லை. அவருடைய மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மட்டுமே ஆங்காங்கே நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் ‘தலைவன் இருக்கின்றான்’ வித் விஜய் சேதுபதி’ என்ற நிகழ்ச்சியை கமல்ஹாசனின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் இன்று காலை சுமார் ஒன்றை மணி நேர நேரடி பேட்டியாக நடத்தி இருக்கிறார்கள்.
கொரானோவுக்கு மத்திய அரசும், மாநில அரசும் திறம்படி செயல்படவில்லை என்ற ரீதியில் அடிக்கடி குற்றச்சாட்டு வைக்கும் கமல்ஹாசன், திடீரென ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற தலைப்பில் இன்று ஒரு நேரடி பேட்டியை அரங்கேற்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நேரத்தை அவர் ஏதாவது கொரானோ நிவாரணப் பணிக்கு பயன்படுத்தி இருக்கலாம், அல்லது நிகழ்ச்சியின் மூலம் ஏதாவது வருமானம் கிடைத்திருந்தால் அதை கொரானோ நிவாரண நிதிக்குக் கொடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது