நல்ல படம் கொடுத்தால் கொண்டாடுவீர்கள் – ஜெயம் ரவி

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘கோமாளி’.

இப்படம் பெரிய வெற்றியைப் பெற்று 50வது நாளைக் கடந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிகழ்வு ஒன்றை நடத்தி படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், கே.எஸ்.ரவிக்குமார், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ஜெயம் ரவி பேசுகையில்,

“இன்றைய நாள் கோமாளியின் வேலை முடிவடையும் நாள். நல்ல படம் கொடுத்தால் நீங்கள் கொண்டாடுவீர்கள், பாராட்டுவீர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.

இந்த வெற்றி நிறைவைத் தந்திருக்கிறது. தனி ஒருவனில் வராத டயலாக் ஒன்று இருந்தது. நேர்மையாய் இருப்பது என்பது நமது கடமை, அது சாதனை ஆகாது. நாம் நல்லவனாக இருக்க வேண்டியது கடமை. நான் மகிழ்ச்சியாக வேலை செய்வதால் தான் வெற்றி தேடி வருகிறது. செய்யும் வேலையை சந்தோஷத்தோடு செய்தால் போதும். படத்தில் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள்.

ரிச்சர்ட் ரொம்ப ரொம்ப நல்லவர். ஹிப்ஹாப் ஆதி என் கேரியரில் இரண்டு பெரிய வெற்றி தந்திருக்கிறார். என் வெற்றியைக் கொண்டாடியவர். நான் நிறைய புதிதாக முயற்சிக்கிறேன் அதை ஆதரவு தந்து ரசிப்பது ஆடியன்ஸ் தான். அவர்களால் தான் வித்தியாசமான படம் செய்கிறேன்.

இந்தப் படத்தில் யோகிபாபுதான் வேண்டுமென்று நான் தான் சொன்னேன். அவர் மிகச்சிறந்த நண்பராகிவிட்டார். அவரை வைத்து நான் படம் இயக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கிறேன், பார்ப்போம்.

சக்தி உண்மையாக இருக்கும் ஒரு நபர். ஐசரி கணேஷ் எனது அண்ணன் போன்றவர். நமக்கு தெரியாமல் நிறைய நல்ல விசயங்கள் செய்து கொண்டே இருப்பவர். இந்த விழா உங்களுக்கு நன்றி சொல்லும் விழா. இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி,” என்றார்.

Read Previous

ரஷ்யாவில் ‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பு

Read Next

பிக் பாஸ் – 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்

Most Popular