பிக் பாஸ் – 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்

விஜய் டிவியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் 3’ நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

நேற்றைய இறுதி நாளில் மலேசியாவைச் சேர்ந்த போட்டியாளர் முகேன் ராவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு 7 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும், இரண்டாவது இடத்தைப் பிடித்த நடன இயக்குனர் சாண்டிக்கு 5 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இறுதிப் போட்டியில் அவர்கள் இருவரையும் மேடைக்கு அழைப்பதற்கு முன்பு, நான்கு இறுதிப் போட்டியாளர்களில் நான்காவது இடத்தைப் பிடித்த ஷெரின், மூன்றாவது இடத்தைப் பிடித்த லாஸ்லியா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

ஷெரினை கடந்த சீசனின் வெற்றியாளரான நடிகை ரித்விகாவும், லாஸ்லியாவை கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் வீட்டிற்குள் சென்று வெளியில் அழைத்து வந்தனர்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் வனிதா, கஸ்தூரி, அபிராமி, சாக்ஷி ஆகியோர் இறுதிப் போட்டியில் மேடையில் நடனமாடி சிறப்பித்தார்கள்.

இந்த சீசனின் போட்டியாளர்களில் பிக் பாஸால் வெளியேற்றப்பட்ட சரவணன், மதுமிதா ஆகியோர் மட்டும் இந்த இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படவில்லை. மற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சீசனின் வெற்றியாளராக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட தர்ஷனை, தங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக கமல்ஹாசன் மேடையில் அறிவித்தார்.

பிக் பாஸ் சீசன் 3ல் வெற்றி பெற்ற முகேன் ராவுக்கு 50 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

Read Previous

நல்ல படம் கொடுத்தால் கொண்டாடுவீர்கள் – ஜெயம் ரவி

Read Next

‘கைதி’, ஒரு மல்டி ஹீரோ படம் – கார்த்தி