டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரகாஷ்பாபு, எஸ்ஆர் பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் திருப்பூர் விவேக் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கைதி’.
சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, நரேன், ரமணா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நாயகி யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரபு, திருப்பூர் விவேக், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் சாம் சிஎஸ், கார்த்தி, நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ், தீனா ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் , எடிட்டர் பிலோமின் ராஜ், வசனகர்த்தா பொன் பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில்,
“இயக்குநர் லோகேஷ் காமெடிய கூட சீரியஸா சொல்றவர். மிகத் தெளிவான ஒருத்தர். அவர் கூட வேறொரு புராஜக்ட் பண்ண வேண்டியது. அதற்கு லேட்டானது. அந்த நேரத்தில் ஒரு சின்னப்படம் பண்ணலாம்னு முடிவு பண்ணப்ப வந்த ஐடியாதான் இது. கேட்கும்போதே நல்லாருந்தது. ஹாலிவுட்ல இது மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு தமிழுக்கு இது புதுசா இருக்கும்.
கார்த்தி சார் ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் இந்தப்படம் பெரிசா மாறிடுச்சு. ஒரு இரவுல நடக்கற கதை, முழுக்க ஆக்ஷன் தான். இந்தப் படத்தில வேலை பார்த்த மொத்த டீமுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். தீபாவளிக்கு வருகிறது. டீஸருக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதே மாதிரி படமும் உங்களை திருப்திபடுத்தும் நன்றி,” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும் போது,
“இது எனக்கு இரண்டாவது படம். இந்தப்படம் நடக்க முழு காரணம் SR பிரபு சார் தான். நாயகி இல்லாம, கமர்ஷியல் விஷயங்கள் இல்லாம, எப்படி பண்ணுவீங்கனு எல்லோரும் கேட்டாங்க.
தமிழ் சினிமால இத உடைக்க முடியாதோனு நினைச்சேன். கார்த்தி சார் கதை கேட்டவுடன் ஷுட்டிங் போகலாம்னு சொல்லிட்டாரு. இப்படிப்பட்ட படம் உருவாக அவர் தான் காரணம். அவர் இல்லைனா இந்தப் படம் இப்படி ஒரு ஆக்ஷன் படமா வந்திருக்காது.
இந்தப்படம் குறுகிய காலகட்டத்தில எடுத்த படம். இந்தப் படத்தில உழைச்ச எல்லோருமே மிகப் பெரிய பங்கை தந்திருக்காங்க. என் உதவி இயக்குநர்கள் எல்லோரும் இரவு பகல் பாராமா உழைச்சிருக்காங்க. அவங்கள இந்த மேடையில் உங்க முன்னாடி அறிமுகப்படுத்துறேன். இது அவங்களுக்கு கொடுக்குற கௌரவமா நினைக்கிறேன். இந்தப்படம் ஒரு தியேட்டர் அனுபவமா இருக்கும். பாருங்க பிடிக்கும்,” என்றார்.
கார்த்தி பேசுகையில்,
“உதவி இயக்குநராக இருக்கும் போது நாம சில படங்கள் செய்யனும்னு நினைக்கிற மாதிரியா படங்கள் நமக்கு எப்போதாவதுதான் வந்து சேரும்.
மெட்ராஸ், தீரன், அந்த மாதிரிதான் ‘கைதி’. ஒரு களத்தில போய் அந்தக் கேரக்டர தெரிஞ்சிக்கிட்டு பண்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிஞ்சது, அத ஆசைப்பட்டு செஞ்சிருக்கேன்.
லோகேஷ் ஆடியன்ஸ்க்கு எப்படி படம் கொடுக்கனும்னு தெரிஞ்ச டைரக்டர். இதுல எந்தளவு புதுசா பண்ண முடியுமோ, பண்ணுங்கன்னு சொன்னேன். அத மொத்த டீமும் பண்ணியிருக்காங்க.
முழுக்க முழுக்க நைட்ல ஷுட் பண்ணிருக்கோம். இதுல நிறைய ஆக்ஷன் பண்ணிருக்கேன். இந்தப் படத்தில நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விஷயம். எப்போதும் வாழ்க்கையில எத வேணாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். இந்தப்படத்தில எல்லோரும் அவ்வளவு நேர்த்தியா உழைச்சிருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரும் இந்தப் படத்துல வித்தியாசமா இருக்கும். இந்தப் படத்துல நான் ஒரு பகுதி தான்.
இது ஒரு மல்டி ஹீரோ படமா இருக்கும். எல்லோருக்குமான பகுதி சரியா அமைஞ்சிருக்கு. படம் முழுக்க ஆக்ஷன் தான். ஸ்டண்ட் மாஸ்டர், அன்பறிவ் வீட்டுக்கே போகல. எனக்கு லாரி ஓட்டறது ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்தப்படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. லாரி ஓட்டறது எவ்வளவு கஷடம்னு அப்பத்தான் தெரிஞ்சது. எனக்கு ஆக்ஷன் படம்னாலே ரொம்பவும் பிடிக்கும். படம் முழுக்கவே ஆக்ஷனா அமைஞ்சிருக்கு. படத்ல நிறைய விசயங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சது. மிகப் பெரிய வெற்றி பெறும். எல்லோருக்குமே பெரிய பேர் வாங்கித் தரும், ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்,” என்றார்.