‘அறம்’ படத்தின் மூலம் சினிமா தயாரிப்பில் இறங்கிய நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ்.
அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்தது.
‘குலேபகாவாலி, ஐரா’ படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘டாக்டர்ஸ்’ படத்தை சிவகார்த்திகேயனின் படத் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் அறிமுகம் ஆகிறார்.
வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ’கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் கே.ஜே.ராஜேஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், யோகி பாபு, வினய், நாயகி பிரியங்கா, இணை தயாரிப்பாளர் கலை அரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
படம் பற்றி இயக்குனர் நெல்சன் கூறுகையில்,
“ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்துமே அடங்கியது தான் இப்படத்தின் கதை. இந்த வகைப் படம் என்று அடக்கிவிட முடியாது. இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளனர்.
சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். விஜய் டிவியில் பணிபுரியும் போதிலிருந்தே சிவகார்த்திகேயனைத் தெரியும்.
அப்போதிருந்து சுமார் 12 ஆண்டுகளாக எங்களது நட்பு தொடர்கிறது. எதிர்காலத்தில் ஒரு படம் பண்ணனும் என்று பேசுவோம். ‘கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு அவருக்கு தகுந்த மாதிரியான கதையும் அமைந்தது, சொன்னேன், உடனே ஒ.கே சொல்லிட்டார், தொடங்கிட்டோம்” என்றார்.