ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போது நடிப்பிலும் நிரூபிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இவர் ஏற்கனவே ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் வில்லனாக நடித்தார். கதிர் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் மெயின் வில்லனாக நடித்திருக்கிறார்.
வடசென்னையில் உள்ள தாதாவாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். வில்லன் என்றால் மிரட்டலான பார்வை வேண்டும், அதற்கென ஒரு கெத்தான உடல் மொழி வேண்டும். அவை இரண்டையும் இந்தப் படத்தில் சரியாகக் காட்டி வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஸ்ரீதர்.
இப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும் போது,
‘‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். படத்தைப் பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும்.
பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியால் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது,’’ என்றார்.