பிரபு தேவா ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கணேஷ் மற்றும் இயக்குனர் விஜய் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சில சமயங்களில்’.
பிரியதர்ஷன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண், நாசர், சண்முகராஜன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் 74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
‘காஞ்சீவரம்’ திரைப்படத்திற்குப் பிறகு பிரியதர்ஷன், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி மீண்டும் இந்த ‘சில சமயங்களில்’ படத்தில் இணைந்துள்ளார்கள்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இந்த ‘சில சமயங்களில்’ படத்தில் நடிக்க ஹிந்தி நடிகர்கள் பலரும் ஆசைப்பட்டார்களாம். ஆனாலும், அதைத் தமிழில் படமாக்க வேண்டும் என அவர் இங்கு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
“திரைப்படம் உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருக்கிறது. ஒன்று, நம்முடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக திரைப்படத்தை உருவாக்குவது. மற்றொன்று, நம் உள்ளத்தில் உதயமான கதையை நமக்காகவே உருவாக்குவது.
‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு என் உள்ளத்தில் இருந்து இரண்டாவது முறையாக உருவானதே ‘சில சமயங்களில்’’, என படம் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.
“ஞானமும், திறமையும் ஒருசேர பெற்ற ஒரு உன்னதமான படைப்பாளி, இயக்குனர் பிரியதர்ஷன். கோல்டன் குளோப் விருது மட்டுமின்றி, அதற்கு மேல் இருக்கும் அனைத்து விருதுகளை பெறும் தகுதியும், திறமையும் பிரியதர்ஷனிற்கு இருக்கிறது.
உலக சினிமாவின் பார்வை தற்போது தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளது, அதற்குக் காரணம் பிரியதர்ஷன். தமிழ் சினிமாவிற்காக ‘சில சமயங்களில்’ திரைப்படத்தை அர்ப்பணிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்,” என்கிறார் பிரகாஷ் ராஜ்.
அடுத்தடுத்து திரைப்பட விழாக்களில் பங்கு பெற உள்ள, நவம்பர் மாதம் ‘சில சமயங்களில்’ படம் வெளியாக உள்ளது.