‘தா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் உத்தமன்.
தொடர்ந்து ‘பாண்டியநாடு, மீகாமன், தனி ஒருவன், பாயும் புலி’ ஆகிய படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
தெலுங்கில் கடந்த வருடம் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக ‘ஸ்ரீமந்துடு’ படத்தில் நடித்து அங்கும் பேசப்பட்டார்.
நாளை வெளியாக உள்ள ‘தொடரி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து அவர் நடித்துள்ள மற்றும் சில பெரிய படங்கள் வெளிவர உள்ளன.
விஜய்சேதுபதி நடிக்கும் ‘றெக்க, நயன்தாரா நடிக்கும் ‘டோரா’, விஜய் நடிக்கும் ‘பைரவா’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
“கோவையை அடுத்துள்ள வாளையாறு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆங்கிலத்தில் கூட சரியாகப் பேச வராது. கல்லூரிப் படிப்பை கோவையில் படித்த போதுதான் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதன் பின் எம்பிஏ முடித்து வேலைக்கு சேர முயன்றேன்.
அதன் பின் விமானத்தில் ‘கேபின் க்ரூ’வில் ஐந்து வருடங்கள் பணியாற்றினேன். என் அண்ணனின் நண்பர் என்னைப் பார்த்து நடிக்க வருகிறாரா எனக் கேட்டார். கல்லூரி படித்த போது கொஞ்சம் மாடலிங்கும் செய்ததால் சரி என்றேன். அப்படித்தான் ‘தா’ பட வாய்ப்பு வந்தது.
‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகுதான் என்னைப் பற்றியும் பலருக்குத் தெரிய வந்தது. அடுத்து பல பெரிய படங்கள் வெளிவருவதால் அவை எனக்கு மேலும் திருப்புமுனையைத் தரும் என எதிர்பார்க்கிறேன்,” என்கிறார்.
ஹரிஷ் என்பதுதான் அவருடைய பெயராம், அப்பாவின் ஞாபகமாக அவருடைய பெயரை உத்தமன் என சேர்த்துக் கொண்டாராம்.
திரையில் பார்க்கத்தான் டெரர் வில்லனாக இருக்கிறார், நேரில் உத்தமமாக அமைதியாக இருக்கிறார் இந்த எம்பிஏ பட்டதாரி…