ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் கண்ணன் தாமரைக்குளம் இயக்கத்தில் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், சம்பத், ஆடுகளம் நரேன், ஓம்புரி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘செண்பக கோட்டை’.
இந்தப் படம் மலையாளத்தில் ‘ஆடு புலி ஆட்டம்’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. ஒரே சமயத்தில் தமிழ், மலையாளத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்களாம்.
தமிழுக்காக எடுக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிய கொஞ்சம் தாமதம் ஆனதால் ஒரே சமயத்தில் வெளியிட தாமதம் ஆகியுள்ளது.
படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது,
“வரலாற்றுக் காலத்தில் நடக்கும் ஒரு கதை, 20 வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஒரு கதை, தற்போது நடக்கும் ஒரு கதை என மூன்று காலகட்டங்களில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.
வரலாற்றுக் காலத்தில் பராந்தக சோழன் என்ற மன்னன், ஒரு மலைவாழ் பெண் மீது காதல் கொண்டு அவரைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அவளுக்காக ஒரு பெரிய மாளிகையை கட்டிக் கொடுக்கிறான்.
போர்க்காலம் வந்த போது மன்னனின் உயிரைக் காப்பாற்ற, தன் உயிரைக் கொடுத்து மரணிக்கிறாள் அந்தப் பெண்.
பல நூறாண்டுகள் கடந்தும் அவளது ஆவி அங்கேயே இருக்கிறது. அதை மையமாக வைத்து இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயராம் இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படி ஒரு கொடுமைக்கார கதாபாத்திரம் அது. ரம்யாகிருஷ்ணன் அம்மன் பக்தையாக நடித்துள்ளார். இரண்டு சிறுமிகள்தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள்.
இதுவரை பார்த்திருக்காத அளவிற்கு ஒரு பேய்ப் படமாக இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.
விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.