‘ஜெய் பீம்’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களும், நடித்தவர்களும்….

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’.

இப்படம் கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் 5 மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளிவந்த ஆயிரக்கணக்கான படங்களில் சில படங்கள் மட்டும்தான் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற படங்களாக இருக்கிறது. அந்தப் படங்களின் வரிசையில் ‘ஜெய் பீம்’ இடம் பெற்றுவிட்டது.

இப்படத்தில் நடித்துள்ள பலரில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் ரசிகர்களின் அதிகப்படியான பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்கள். அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்…

'செங்கேணி' ஆக நடித்த நடிகை லிஜோமோல் ஜோஸ்

'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு நடிகையாக அறிமுகமானவர். 2016 ஆம் ஆண்டு முதல் தனது நடிப்பாற்றலால் தனித்துவமிக்க கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் இதயத்தைத் திருடி வருபவர். 'ஜெய் பீம்' படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தை ஏற்று, தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி, ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து அவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். 

தன் கணவனுக்கு நீதி கேட்கும் ஒடுக்கப்பட்ட பழங்குடியின பெண்ணின் கதாபாத்திரத்தில், அப்பெண்ணின் உணர்ச்சிகள், உரையாடல்கள் போன்ற பல நுட்பமான விசயங்களில் பிரத்தியேக கவனம் செலுத்தி, செங்கேணியின் சோகத்தை உண்மையானதாகவும், நம்பக்கூடியதாகவும்  பார்வையாளர்களுக்குக் கடத்தி இருக்கிறார். மேலும் படத்தின் மையப்புள்ளியாகவும், இதயமாகவும் இருந்ததுடன் படைப்பின் ஆன்மாவாகவும் அவர் திகழ்ந்தார்.

ராஜாகண்ணுவாக நடித்த நடிகர் மணிகண்டன்

திரைப்பட எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் கே. மணிகண்டன். 'ஜெய் பீம்' படத்தில் தனது முன்மாதிரியான நடிப்பால் மீண்டும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 90களில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் மணிகண்டன், ராஜாகண்ணு வேடத்தில் நடித்திருக்கிறார். 

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகவும், அச்சமற்ற மற்றும் துணிச்சலான குணநலன்களைக் கொண்ட பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். அநீதிக்கு எதிராக நிற்கும் தைரியம், தனது சுயமரியாதை மற்றும் நேர்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாகவும் மிளிர்கிறார். கடின உழைப்பாளியாகவும், தன் கதாபாத்திரத்தின் வாழ்வாதார தன்மையை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி, பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட அந்த ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தை அற்புத நடிப்பாற்றலால் உயிர்ப்பித்திருக்கிறார். அவரது இயல்பான உடல் மொழி, உரையாடல் மொழி மற்றும் நடிப்பால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என இருவரிடமும் நேர்மறையான பாராட்டைப் பெற்றுள்ளார்.

மித்ராவாக நடித்த நடிகை ரஜிஷா விஜயன்

தொலைக்காட்சி தொகுப்பாளினியும், அழகான இளம் நடிகையுமான ரஜிஷா விஜயன், 'ஜெய் பீம்' படத்தில் மித்ரா என்ற சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமான காதல் காட்சிகள் உள்ள படங்களில் நடித்து, ஏராளமான பாராட்டுகளைப் பெற்ற இவர், 'ஜெய் பீம்' படத்தின் கதையோட்டத்திற்கு தேவையான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் மூலம் வழக்கமான வேடத்திலிருந்து சவாலான வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

எஸ். ராம்மோகனாக நடித்த நடிகர் ராவ் ரமேஷ்

தெலுங்கு திரை உலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் ராவ் ரமேஷ்.  தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 'ஜெய் பீம்' படத்தில் வழக்கறிஞராக நடித்து தன் திறமையின் வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தெலுங்கு நடிகரான இவரின் சரளமான தமிழ் உரையாடல் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

பெருமாள் சாமியாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ்

இந்திய திரை உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் அனுபவம் கொண்ட மூத்த நடிகர் பிரகாஷ்ராஜ். 'ஜெய் பீம்' படத்தில் பெருமாள் சாமி என்ற போலீஸ் அதிகாரியாக தன் அனுபவமிக்க நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி, மீண்டும் ஒரு முறை பார்வையாளர்களை பரவசப்படுத்தி இருக்கிறார். அவரது கதாபாத்திரம் கதையின் மைய நோக்கத்தை சமநிலைப்படுத்தும் வகையில் அமைந்ததால், அதனை உணர்ந்து அந்த கதாபாத்திரத்தை சக்தி வாய்ந்ததாக மாற்றி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்.

வழக்கறிஞர் சந்துருவாக நடித்த நடிகர் சூர்யா

பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர் சூர்யா. 'ஜெய் பீம்' படத்தின் உண்மையான வெற்றிக்கு அடித்தளமிடும் வழிகாட்டும் சக்தியாக இருந்திருக்கிறார். 'ஜெய் பீம்' படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும், கதையும், கதையின் விவரணமும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதை உறுதி செய்யும் கதாபாத்திரமாக, தனது அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இது சூர்யாவின் ரசிகர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Read Previous

அன்புமணிக்கு சூர்யா தந்த ‘சரியான’ விளக்கம்

Read Next

‘ஜெயில்’ படத்தின் குரலாக, முகவரியாக ‘நகரோடி’ – இயக்குனர் வசந்தபாலன்

Most Popular