1991ல் வெளிவந்த முரளி நடித்த ‘இதயம்’ படம் ஒருதலைக் காதலின் வலியை மிக ஆழமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் சொன்னது. அதன்பின் காதலை சொல்லத் தயங்குபவர்களை ‘இதயம் முரளி’ என விமர்சிக்கும் அளவிற்கு அந்தப் படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. அப்படியான ஒரு ஒருதலைக் காதலை இந்த ‘இதயம் முரளி’யில் கலகலப்பாகவும், மென்மையாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
முதல் காதல் தோல்வியில் முடிந்துவிட்டதால், அடுத்த காதல்தான் அதற்கான மருந்து என்று வரிசையாகக் காதலிக்கும் அதர்வா, அந்தக் காதல்களை சொல்லாமே இருக்கிறார். இறுதியில் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய்மாமா தேர்ந்தெடுத்த பெண்ணை மணக்க சம்மதிக்கிறார். விழுந்து விழுந்து காதலித்தவரது கல்யாணம் காதல் கல்யாணமாக அமைந்ததா, இல்லையா என்பதை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் கொஞ்சம் நீளமாகவே இயக்கியிருக்கிறார்.
அதர்வா முரளி இதுவரை நடித்த படங்களில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம். அவரது தோற்றம், உடை, பாணி என அனைத்திலும் புதிய தோற்றத்தை அளித்திருக்கிறார்கள். நடிப்பைப் பொறுத்தவரை பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை என்றாலும், காதல் காட்சிகளில் இயல்பாகவும் கவனம் ஈர்க்கும் விதத்திலும் நடித்திருக்கிறார்.
நாயகிகளாக வந்த ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும், நடிப்புக்கு அதிகம் தேவையில்லாத வேடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது அழகு, புன்னகை, கண் அசைவுகள் மட்டுமே காதல் காட்சிகளுக்கு போதுமானதாக இருந்தது. அதர்வாவின் மாமாவாக நடித்த நட்டி நட்ராஜ், காக்கி சட்டை இல்லாமல் இயல்பான தோற்றத்தில் தோன்றியது பெரும் ஆறுதலாக இருந்தது. ரஜினி பாணி எதுவும் இல்லாமல், தனித்துவமாக நடித்திருப்பது கூடுதல் நல்ல அம்சம்.
தமன்.எஸ், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன் உள்ளிட்ட நடிகர்கள் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் திரையை நிரப்பியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஆதரவு படத்துக்கு சில இடங்களில் உயிரூட்டியது.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். திரைக்கதை சொல்லாத மேஜிக்கை, அவரது கேமரா முழுமையாக நிகழ்த்தியிருக்கிறது. நாயகன்-நாயகிகள் மட்டுமல்லாமல், சிறிய வேடங்களில் வந்த நடிகர்களைக் கூட திரையில் மிளிர வைத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் ஓவியம் போல அழகாக இருக்கும் விதத்தில் படம்பிடித்திருப்பது பார்வையாளர்களுக்கு பெரிய காட்சி விருந்தாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் பாடல்கள் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி இருந்தாலும், மனதில் நீண்ட நேரம் நிற்கும் அளவுக்கு இல்லை. பின்னணி இசை பெரும்பாலும் எலக்ட்ரானிக் கருவிகளின் ஆதிக்கத்தில் இருப்பதால், உணர்ச்சி ரீதியாக பலவீனமாகவே தெரிகிறது.
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், காட்சிகளின் பிரமாண்டத்தை சிதைக்காமல், அழகாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.
ரமணகிரிவாசன் எழுதிய வசனங்களும், ஆகாஷ் பாஸ்கரன், டிராவிட் செல்வம் ஆகியோர் கொடுத்த கூடுதல் வசனங்களும் காதல் காட்சிகளுக்கு போதுமான உணர்வைத் தரவில்லை. காமெடி காட்சிகளிலும் பெரிய அளவில் சிரிப்பைத் தூண்டவில்லை.
ஹீரோவின் பல காதல் தோல்விகளை வித்தியாசமான பாணியில் சொல்ல முயற்சித்த இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், எழுத்துப் பகுதியில் சற்று தடுமாறியிருந்தாலும், காட்சி மொழியில் பிரமாண்டமாக வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக ஒளிப்பதிவின் உதவியுடன், படத்தை பார்வைக்கு மிகவும் கவர்ச்சிகரமாக மாற்றியிருக்கிறார்.
இதயம் முரளி – கதை மற்றும் வசனத்தில் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும், அழகிய காட்சிகள் மற்றும் அதர்வாவின் புதிய தோற்றத்தால் பொழுதுபோக்காக இருக்கும் ஒரு இலகுவான காதல் படம்.