மரண தண்டனை என்பது நீதியின் உச்சமா, அல்லது அரசு செய்யும் மற்றொரு கொலையா? இந்தக் கேள்வியை நேரடியாக முன்வைத்து, 1944ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் பெயரைத் தலைப்பாக வைத்தாலும், அதற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் ஒரு புதிய கதையைச் சொல்லும் திரைப்படம் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’. இயக்குநர் தயாள் பத்மநாபன், இந்தப் படத்தின் மூலம் “மரண தண்டனையும் ஒரு வகையான கொலைதான்” என்ற விவாதத்தை மிகத் தெளிவாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் முன்வைத்திருக்கிறார்.
குற்றவாளியின் சூழ்நிலை, பின்னணி, வறுமை, வேலை இல்லாத்தனம் ஆகியவற்றைப் புறக்கணித்து, வெறும் குற்றத்தின் அடிப்படையில் மட்டும் மரண தண்டனை வழங்குவது நீதி அல்ல என்று உரக்கச் சொல்வதே இப்படத்தின் மையக்கரு.
படிப்பு முடித்தும் வேலை கிடைக்காததால் வறுமையில் தவிக்கும் வெற்றி (நாயகன்), திருட்டைத் தொழிலாக மாற்றிக்கொள்கிறான். சந்தர்ப்பச் சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகி, நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. தன் குற்றத்திற்கான தண்டனை என்றாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டுவிட்டதாக வெற்றி வாதிடுகிறான். அவனது வாதம் சரியா? தவறா? என்பதை மனித உணர்வுகளின் அடிநாதத்தைத் தொடும் விதத்தில், உரையாடல் மையப்படுத்திய பாணியில் சொல்கிறது இப்படம்.
வெற்றியாக நடித்த நடிகர், அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு, அளந்து கொடுக்கும் உச்சரிப்பு, இறுக்கமான மனநிலையிலும் தெளிவாக எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றால் படத்தைத் தாங்கிப் போகிறார். பெரும்பாலான காட்சிகள் உரையாடல் சார்ந்தவை என்றாலும், அவற்றைச் சலிப்பின்றி நகர்த்திச் செல்லும் அவரது நடிப்பு பார்வையாளர்களின் கவனத்தைத் தொடர்ந்து வைத்திருக்கிறது.
நாயகியாக நடித்த பிரிகிடா சாகா, கிராமத்துப் பெண் வேடத்துக்கு முழுமையாகப் பொருந்தவில்லை என்றாலும், எதார்த்தமான நடிப்பால் தன்னை அந்தக் கதாபாத்திரத்துடன் இணைத்துக்கொள்ள முயன்றிருக்கிறார். சிறை அதிகாரியாக நடித்த ரங்கராஜ் பாண்டே, வெற்றியின் வாதத்துக்கு எதிராகக் கம்பீரமாக வாதிடும் கதாபாத்திரத்தில் தனது அனுபவத்தை அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
வெற்றியின் நண்பராக மாறன், அம்மாவாக லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லஷ்மிகாந்தனாக கவிதா பாரதி, தூக்கு மேடையில் நிற்கும் ஹேங்மேனாக சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட அனைத்து துணை நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமாக நடித்து, படத்தின் நம்பகத்தன்மையை உயர்த்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர் செல்வம், செயற்கை விளக்குகளைத் தவிர்த்து இயற்கை சூரிய ஒளியையும் குறைந்த வெளிச்சத்தையும் பயன்படுத்தி, கதையின் இருண்ட மற்றும் யதார்த்தமான சூழலை அழகாகப் படம்பிடித்திருக்கிறார். சில இடங்களில் ஏஐ காட்சிகள் இருந்தாலும், அவை கதையின் ஓட்டத்துக்கு இடையூறாக இல்லாமல் இயல்பாக இணைந்திருக்கின்றன.
தர்புகா சிவாவின் இசை, பின்னணியில் இறுக்கத்தையும் அமைதியையும் தேவைக்கேற்ப மாற்றி அமைத்திருக்கிறது. பாரதியார், பாரதிதாசன் மற்றும் தயாள் பத்மநாபன் எழுதிய பாடல் வரிகள் கதாபாத்திரங்களின் மனநிலையை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன.
படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி, உரையாடல் நிறைந்த காட்சிகளைச் சுவாரஸ்யமாக வெட்டி ஒட்டி, பார்வையாளர்களின் கவனத்தைத் தக்கவைத்திருக்கிறார். கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து எழுதிய திரைக்கதையும் வசனங்களும் எளிமையான கதைக்கு வலிமையான அடித்தளம் அமைத்திருக்கின்றன. வசனங்கள் அனைத்தும் கூர்மையாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பது படத்தின் பெரிய பலம்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் தானே கவனித்த தயாள் பத்மநாபன், தன் வலிமையான எழுத்தாற்றலால் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற தன் நிலைப்பாட்டை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
“ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. அரசு உட்பட யாருக்கும் அந்த உரிமையைப் பறிக்கும் அதிகாரம் இல்லை” என்ற கருத்தை, வெறும் வாதமாக மட்டும் நிறுத்தாமல், மனித உணர்வுகளுடன் இணைத்து முன்வைத்திருப்பது இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி.