மலையாளத் திரைப்படமான ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ பெரும் வெற்றி பெற்ற எழுத்தாளர் சஞ்சீவ் பழவூர், தமிழில் இயக்கும் முதல் படம் ‘என்ன விலை’. கருணாஸ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய வேடத்தில் இணைந்திருக்கிறார். விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீனா, மோகன் ராம் உள்ளிட்ட பல மூத்த நடிகர்களும் துணை வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
கலமயா பிலிம்ஸ் சார்பில் ஜித்தேஷ்.வி தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு அல்பி ஆண்டனி, படத்தொகுப்பு ஸ்ரீஜித் சாரங் ஆகியோர் கையாண்டிருக்கின்றனர்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், முன்னணி ஓடிடி தளங்கள் படத்தைப் பார்த்துவிட்டு வெளியீட்டுக்கு முன்பே பெரும் தொகை கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளன. பிரபலங்கள் பலர் இப்படம் வணிகரீதியாகப் பெரும் வெற்றி பெறும் என்றும், சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பாராட்டியுள்ளனர்.
இந்தப் பாராட்டுகளால் உற்சாகமடைந்த படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்து, படம் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்தது.
கருணாஸ் பேசியதாவது,
“என் திரை வாழ்க்கையில் ‘என்ன விலை’ ஒரு திருப்புமுனைப் படமாக அமையும். நான் இதுவரை காமெடி வேடங்களில் அதிகம் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு நடிகனாக ஒரு படத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்ற என் நீண்டநாள் ஆசை இப்போது நிறைவேறியிருக்கிறது. ‘போகுமிடம் வெகுதூரம் இல்லை’ படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் எனக்கு இன்னும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இயக்குநர் சஞ்சீவ் பழவூர், மிக எளிய கதைக் கருவை வைத்து, உலக சினிமாவிலேயே இதுவரை எழுப்பப்படாத ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். அது என்னவென்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் அந்தச் சிறிய விஷயத்தை வைத்து அவர் எழுதிய திரைக்கதை, பார்வையாளர்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும். அதைப் படத்தில் பாருங்கள்.
இயக்குநருக்கு தமிழ் மீது மிகுந்த பற்று உண்டு. தமிழ்நாட்டில் தன் மகள்களைப் படிக்க வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அவருக்கு அன்பு இருக்கிறது. நடிகர்களிடம் இருக்கும் திறமையைச் சரியாக வெளிக்கொண்டு வரும் திறன் அவருக்கு உண்டு. இந்தப் படத்தில் எனக்கு நல்ல பெயரும் பாராட்டும் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தேசிய விருது பெறுவது என் நீண்டநாள் கனவு. அந்தப் பயணத்தை இப்போது தொடங்கியிருக்கிறேன். இந்தப் படம் அதற்கு உதவும் என்று பலர் சொல்கிறார்கள். பார்ப்போம்.”
இயக்குநர் சஞ்சீவ் பழவூர் பேசியதாவது,
“ராமேஸ்வரத்தில் வாழும் ஒரு சாதாரண மீனவர் குடும்பத்திற்காகக் கடுமையாக உழைக்கிறார். அவரது வாழ்வில் நடக்கும் ஒரு சிறிய சம்பவம், நாடு முழுவதையும் உலுக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கிறது. அந்தச் சம்பவம் என்ன என்பதுதான் படத்தின் மையம்.
கதை எழுதி முடித்த உடனேயே கருணாஸ் சார்தான் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர் என் எதிர்பார்ப்பை விட அதிகமாக ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். ராமேஸ்வரம் மீனவர்களுடன் பல நாட்கள் பழகி, அவர்களின் வாழ்க்கை முறையை நேரடியாக உணர்ந்துதான் திரைக்கதை எழுதினேன்.
‘வாழை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தப் படமும் திரையரங்குகளில் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பார்வையாளர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.”
நிமிஷா சஜயன் பேசியதாவது,
“முதல் முறையாக வழக்கறிஞர் பாத்திரத்தில் நடிக்கிறேன். அதிக வசனங்கள் உள்ள கதாபாத்திரம் என்பதால் மிகுந்த கவனத்துடன் நடித்தேன். இந்தப் படத்திற்காக நானே டப்பிங் பேசியிருக்கிறேன். கருணாஸ் சாருடன் காமெடி காட்சிகள் குறைவு. ஒரே இடத்தில் மட்டும் அழுத்தமான காமெடி உள்ளது.
என் முதல் படத்தின் எழுத்தாளர்தான் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். கதை இதுவரை சொல்லப்படாத முக்கியமான விஷயம் என்பதால் இதில் நடிக்க முடிவு செய்தேன்.”
தயாரிப்பாளர் ஜித்தேஷ்.வி பேசியதாவது,
“நான் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை. என் நண்பர் மூலம் சஞ்சீவ் கதையைச் சொன்னார். கேட்டதும் கதை மிகவும் சிறப்பாக இருப்பதால், எப்படியாவது இதைத் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. ஓடிடி உரிமை ஏற்கனவே விற்றுவிட்டது. ஆனால் திரையரங்க வெற்றி என்பது எங்களுக்கு மிக முக்கியம். அதற்காக ரோமியோ பிக்சர்ஸ் மூலம் படத்தை வெளியிட உள்ளோம்.”
இயக்குநர் சஞ்சீவ் பழவூர் மேலும் கூறுகையில், “இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே முக்கியமான படமாக அமையும். கருணாஸ் சாருக்கு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக மூன்று முக்கிய நபர்கள் பாராட்டியுள்ளனர்” என்றார்.