தென்னிந்தியாவின் கான கோகிலம் எஸ் ஜானகி மறைவு

பிரபல பின்னணிப் பாடகி எஸ் ஜானகி (சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி) 11 ஜூலை 2026 அன்று மைசூரில் தன் 88ஆவது வயதில் காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட சுவாசப் பிரச்சினைகள் மற்றும் இதய நோய் காரணமாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தார்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட ஜானகி அம்மா, கானக் கோகிலா, ஜானகியம்மா, இசையரசி போன்ற பட்டங்களால் அழைக்கப்பட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில் அவர் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களை பதிவு செய்தார். கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவரது குரல் தலைமுறை தலைமுறையாக மக்களின் இதயங்களைத் தொட்டது.

1957இல் தமிழ்த் திரைப்படம் ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில் “பெண் என் ஆசை பாழானது ஏனோ” என்ற பாடலுடன் தொடங்கிய அவரது பயணம், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், உள்ளிட்ட இசை மேதைகளுடன் இணைந்து எண்ணற்ற அழியாத பாடல்களைப் படைத்தது.

நான்கு தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட 33 மாநில விருதுகள், கலைமாமணி, ராஜ்யோத்சவ பிரஷஸ்தி, மைசூர் பல்கலைக்கழக முனைவர் பட்டம் போன்ற பல கௌரவங்களைப் பெற்றார். 2013இல் அவருக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை, “தாமதமாக வந்தது” என்று மறுத்து, தென்னிந்திய கலைஞர்களுக்கான அங்கீகாரம் குறித்த தனது கொள்கையை உறுதிப்படுத்தினார்.

அவரது குரலின் தனித்துவம் — குழந்தை குரல் முதல் வயது முதிர்ந்த பெண் குரல் வரை, எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வல்லமை — அவரை “எக்ஸ்பிரஷன் குயின்” என்று உயர்த்தியது. ஒன்றா இரண்டா ஆயிரக்கணக்கான பாடல்களால் அவரது குரல் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது.

தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் முக ஸ்டாலின், உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜானகி அம்மாவின் குரல் ஒருபோதும் மறையாது. அது தலைமுறை தலைமுறையாக இந்திய இசையின் பொக்கிஷமாக வாழும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

இசை வானத்தில் ஒரு நட்சத்திரம் மறைந்தாலும், அதன் ஒளி என்றென்றும் ஒளிரும்.

Read Previous

ஐ நோபடி – விமர்சனம்

Most Popular