திரைப்படி நடிகர், நாடக ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆலோசகர் என பல திறமைகளை தனக்குள் வைத்திருந்த சோ ராமசாமி இன்று அதிகாலை சென்னையில் காலமானார், அவருக்கு வயது 82.
200 தமிழ்ப் படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சோ, 14 திரைப் படங்கள், 4 தொலைக்காட்சி தொடர்கள், 23 நாடகங்கள், 8 நாவல்கள் எழுதி இருக்கிறார். நான்கு படங்களை இயக்கி இருக்கிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆலோசகராக, குருவாக இருந்தவர் சோ. ஜெயலலிதா மறைந்த அடுத்த இரண்டு நாட்களிலேயே அவரும் மறைவடைந்தது அதிர்ச்சியான செய்தி.
தற்போது அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவருக்கு, ஒரு நாடகத்தைப் பார்த்த போது நடிப்பின் மீது ஆர்வம் வந்து நடிக்க ஆரம்பித்தார். ‘தேன் மொழியாள்’ என்ற நாடகத்தில் சோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவரை ‘சோ’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
பட்டு எழுதிய ‘பெற்றால்தான் பிள்ளையா’ என்ற நாடகம் ஏ. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடிக்க ‘பார் மகளே பார்’ என்ற திரைப்படமாக உருவான போது நாடகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தை திரைப்படத்திலும் ஏற்று நடித்து நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ‘முகம்மது பின் துக்ளக்’ என்ற அரசியல் நையாண்டி படத்தை இயக்கினார்.
ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் சோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சமீபத்தில் வெளிவந்த ‘கபாலி’ படத்தைக் கூட மருத்துவ வசதிகளுடன் பிரிவியூ தியேட்டரில் பார்த்து ரசித்தார்.
பலரை நேரடியாக விமர்சித்து தன்னுடைய துக்ளக் பத்திரிகையில் எழுதியவர். இருந்தாலும் அதையும் மீறி அனைவருடனும் நட்புடன் இருப்பார். சோவிற்கும், கலைஞருக்குமான நட்பு அரசியல் வட்டாரங்கள் அறிந்த ஒன்று.
சோவின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது.