டிரீம் வாரியர் பிக்சர்ஸ், ரமணீயம் டாக்கீஸ் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஞானவேல்,
“இந்தப் படத்தின் கதையை முதலில் மலையாள நடிகர் நிவின் பாலியிடம்தான் சொன்னேன். ஆனால், அவரால் இந்தப் படத்திற்காகத் தேதிகளை ஒதுக்கி நடிக்க முடியவில்லை. அதன் பின்தான் அசோக் செல்வன் இந்தப் படத்திற்குள் வந்தார். முதல் பென்ச் மாணவர்களைப் பற்றியும், கடைசி பென்ச் மாணவர்களைப் பற்றியும் படங்கள் வந்துள்ளன. நடு பென்ச் மாணவர்களைப் பற்றி படங்கள் வரவில்லை. இந்தப் படத்தின் நாயகன் நடு பென்ச் மாணவன். அப்படிப்பட்ட ஒரு மாணவனுடைய நிலைமையை மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் அசோக் செல்வன்,” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன்,
“இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, வீட்டிற்குச் சென்றிருக்கும் போதுதான் அவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். யார் நாயகன் எனக் கேட்டேன், இன்னும் முடிவாகவில்லை என்றார். அதன் பின் நானே தயாரிப்பாளர் பிரபுவைத் தொடர்பு கொண்டு இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்றேன். இயக்குனர் ஞானவேலைச் சந்தித்து படத்தின் கதையைத் கேட்டுத் தெரிந்து கொண்டேன். நானும் படிக்கும் போது நடு பென்ச் மாணவன்தான். அதனால் படத்தில் என்னால் ஒன்றி நடிக்க முடிந்தது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு நடித்தேன். என் அப்பாவால் கூட என்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை,” என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, நாயகி பிரியா ஆனந்த் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பேசினர்.
‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஜுலை 28ம் தேதி வெளியாகிறது.