‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு’ சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
பாஜகவின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால் மெர்சல் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட மிரட்டலாக இதைப் பார்க்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
“மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும் !.
மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்கச் சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன்.
ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது ?.
சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது,” என அறிக்கையில் விஷால் கூறியுள்ளார்.