தமிழ்த் திரையுலகத்தில் இருந்து மலையாளத் திரையுலகத்தில் ஒரு நடிகர் தனக்கென ஒரு ‘மாஸ்’ காட்டி வருகிறார் என்றால் அது விஜய் மட்டுமே.
இதற்கு முன் தமிழ் நடிகர்களில் கமல்ஹாசனுக்கு என்று மட்டுமே மலையாளத் திரையுலகில் ஓரளவிற்கு வரவேற்பு இருந்தது.
ஆனால், சமீப காலமாக விஜய்க்கு அங்கு கிடைத்து வரும் மிகப் பெரும் வரவேற்பு, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட ஸ்டார்களையே வியக்க வைத்துள்ளது.
விஜய் நடித்து எந்த ஒரு படம் வெளிவந்தாலும் அதை ஒரு திருவிழாவாகவே கேரள ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட அப்படி ஒரு கொண்டாட்டத்தைப் பார்க்க முடியாது என்று சொல்லுமளவிற்கு கேரள மாநிலத்தின் பல ஊர்களில் அப்படி ஒரு கொண்டாட்டம் இருக்கிறது.
விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த படங்கள் எப்படியோ, ஆனால், ‘மெர்சல்’ படத்திற்கு அங்கு கிடைத்துள்ள வரவேற்பும், வசூலும் தமிழ் நடிகர்களையும் சேர்த்து பொறாமைப்பட வைத்துள்ளது.
விஜய் படங்கள் என்றாலே கமர்ஷியல் ஆக்ஷன் படங்களாக மட்டுமே இருக்கும். ஆனால், கேரள ரசிகர்கள் யதார்த்தமான சினிமாவைக் கொண்டாடுபவர்கள் என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். அவர்களுக்கு விஜய் நடித்து வெளிவரும் கமர்ஷியல் படங்கள் மிகப் பெரிய மாற்றமான ரசனையைக் கொடுக்கிறது என்பதே அதற்குக் காரணமாகவும் இருக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் கேரள மாநிலத்தின் பல நகரங்களிலும் வெளியாகியுள்ள ‘மெர்சல்’ படத்தினை அங்குள்ள ரசிகர்கள் கொண்டாடும் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் பார்ப்பதற்கே ஆச்சரியமாக உள்ளது.
‘மெர்சல்’ படம் பற்றி மலையாள டிவி சேனல்கள், மலையாள பத்திரிகைகள், இணையதளங்கள் என பலரும் ஒரு மலையாளப் படம் வெளிவந்தது போல படம் பற்றிய செய்திகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
கேரளாவில் மட்டும் முதல் நாளில் 6 கோடி ரூபாயை வசூலித்து மிகப் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. வார நாட்களின் மத்தியில் படம் வெளியாகி அந்த அளவிற்கு வசூலைப் பெற்றுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
மொழி, கலாச்சாரம் அனைத்தையும் கடந்து விஜய்யிடம் உள்ள ஒரு வசீகரம் அவர்களைக் கவர்ந்துவிட்டது. இனி வரும் காலங்களில் அது அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.