தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்கும் சரித்திரப் படமான ‘சங்கமித்ரா’ படத்தின் நாயகியாக திஷா படானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் நாயகியாக முதலில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். படத்தின் துவக்க விழா கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த போது அதிலும் கலந்து கொண்டார். ஆனால், திடீரென இப்படத்திலிருந்து விலகினார்.
அதன் பின் இந்தப் படத்திற்காக பலரையும் மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்போது படத்தின் நாயகியாக திஷா படானி முடிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ‘லோஃபர்’ என்ற தெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அதன் பின், ‘பெஃபிக்ரா, எம்.எஸ். தோனி’ ஆகிய ஹிந்திப் படங்களிலும், ஜாக்கி சான் நடித்த ‘குங்பூ யோகா’ படத்திலும் நடித்துள்ளார்.
பார்ப்பதற்கு கொஞ்சம் ஸ்ருதிஹாசன் சாயலில்தான் இருக்கிறார் திஷா படானி.
இப்படத்தில் நடிப்பது குறித்து திஷா , “மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், இந்த அற்புதமான படத்தின் படப்பிடிப்புக்காக காத்திருக்க முடியவில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார்.