அவள் – விமர்சனம்

‘அவள்’ என்ற பெயரைப் பார்க்கும் போது முதலில் , காலை காட்சி மலையாளப் படம் போல இருக்கிறதே என நினைப்பவர்களை இந்தப் படம் ஏமாற்றவே ஏமாற்றாது. ஏனென்றால் படத்தில் அத்தனை முத்தக் காட்சிகள் இருக்கின்றன.

என்னதான், ‘ஏ’ சர்டிபிகேட் என்று வாங்கியிருந்தாலும் பேய்ப் படங்களை குடும்பத்தினருடன் வந்து பார்ப்பார்கள் என்ற எண்ணம் இயக்குனருக்கும், சித்தார்த்துக்கும் இருந்திருக்கலாம்.

பேய்ப் பட மோகம் தமிழ் சினிமாவில் இன்னும் மறையவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தில் பேயை காமெடியாகக் காட்டாமல் கொஞ்சம் சீரியசாகவே காட்டுகிறார்கள். அதுவும் அது ஒரு சீனாப் பேய் வேறு.

சுமார் 80 வருடங்களுக்கு முன்பு ஒரு சீனா பெண்ணும், அவருடைய சிறு மகளும் இறந்து போகிறார்கள். அவர்களின் ஆவி, அந்த வீட்டுக்குள்ளேயே சுற்றி வருகிறது. 80 வருடங்கள் கழித்து அந்த வீட்டை வாங்கி தன் குடும்பத்தினருடன் குடி வருகிறார் அதுல் குல்கர்னி. அவர் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் கணவன், மனைவியான சித்தார்த், ஆன்ட்ரியா குடியிருக்கிறார்கள். அதுல் குல்கர்னியின் மகள் அனிஷா மீது அந்த சீனப் பேய் புகுந்து விடுகிறது. இதைக் கண்டுபிடிக்கும் மனநல மருத்துவரான சுரேஷ், டாக்டரான சித்தார்த் உதவியுடன் அனிஷாவினுள் புகுந்துள்ள பேயை விரட்டப் பார்க்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்கிறது. இதுதான், ‘அவள்’ படத்தின் கதை.

மூளை அறுவை சிகிச்சை டாக்டராக சித்தார்த். படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். பக்கத்து வீட்டிற்கு குடிவரும் அனிஷாவே சித்தார்த்தின் அழகில் மயங்குகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிளைமாக்ஸ் சித்தார்த் மூலமாகத்தான் நகர்கிறது, அது என்ன என்பதுதான் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸ்.

இந்தப் படத்தில் ஆன்ட்ரியா நடிக்க சம்மதித்தது எப்படி எனத் தெரியவில்லை. படம் முழுவதும் அவர் வரும் அனேக காட்சிகளில் கணவரான சித்தார்த், அவருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். சமீப காலமாக தமிழ் சினிமாவில் இத்தனை முத்தக் காட்சிகள் வந்ததில்லை எனத் தாராளமாகச் சொல்லலாம்.

படத்தின் இரண்டாவது கதாநாயகன் அளவிற்கு படம் முழுவதிலும் சுரேஷ் வருகிறார். அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர் ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ஹிமாச்சல பிரதேசத்தில் கதை நகர்ந்தாலும், ஒரு வீட்டுக்குள்தான் அதிக நேரம் படம் நகர்கிறது. பொதுவாக பேய்ப் படம் என்றால் நாயகன் அல்லது நாயகி இருக்கும் வீட்டில்தான் பேய் இருக்கும். இந்தப் படத்தில் வித்தியாசமாக பக்கத்து வீட்டில் பேய் இருக்கிறது. போனால் போகிறதென்று கிளைமாக்சுக்கு முன்பாக நாயகன் வீட்டிற்குப் பேய் வருகிறது.

கொஞ்சம் வழக்கமான பேய் படக் காட்சிகள் இருந்தாலும், படம் முழுவதுமே திகிலான அனுபவம் கிடைக்கிறது.

Read Previous

விழித்திரு – விமர்சனம்

Read Next

250 கோடியை நெருங்கும் ‘மெர்சல்’