தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் துளி அறக்கட்டளை சார்பில் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் கடந்த 01.11.2026, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நடிகர் விஜய் சேதுபதி, அஜித்குமார் ரவீந்திரன், சிவாஜி பிரபாகர் மற்றும் ஜெய் பாலா ஆகியோர் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்ச்சி, விஜய் சேதுபதி நற்பணி மன்றம், வள்ளலார் வேலைவாய்ப்புச் சேவை இயக்கம் (VVVSI Trust), நர்சிங் ஸ்டேஷன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ் மண் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முதியோர்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 200 பேருக்கு தீபாவளி ஆடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில் ஆய்க்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றனர். முகாமில் ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரைப் பரிசோதனைகள், இதய மின் பதிவுப் பரிசோதனை (ECG), பொது மருத்துவ ஆலோசனைகள், உணவுமுறை வழிகாட்டுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.
பண்டிகைக் காலத்தில் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கியதுடன், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பயனாளிகள், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அமைப்புகள், நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.