வீ.ஜெ.மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம், வரும் நவம்பர் 27, 2026ல், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரத்யேக நன்றி டீஸரையும் வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ‘குறிஞ்சி மலை மேல’ யூடியூபில் 1.8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ரம்யா நம்பீசன் பாடியுள்ள இப்பாடலை கு. கார்த்திக் எழுதியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார். மாறா எழுதி, ஷில்வி ஷரோனுடன் இணைந்து பாடிய இரண்டாவது பாடலான ‘உள்ளார’ ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தை, பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் பேண்டஸி அம்சங்கள் கலந்த படமாக உருவாகியுள்ள இதில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடிக்க, தீப்ஷிகா, நக்ஷா சரண் மற்றும் ஸ்ரீராம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
1983-ம் ஆண்டு காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட கதைக்கு ஏற்ற வகையில், கொடைக்கானலின் மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் ஒன்றை உருவாக்கிப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
படத்தின் பின்னணி இசை, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உள்ள புகழ்பெற்ற புடாபெஸ்ட் ஸ்கோரிங் கம்பெனி ஸ்டுடியோவில் சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நேரடி இசைக்குழுவைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். ராம்ஜி கலை இயக்கத்தையும், மாஸ்டர் தீனா நடன இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டி. ஜூட் ஆனந்த் தயாரித்துள்ளார். ராஜேஷ் ஆர், டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்ஸர்ஸ்) மற்றும் கடையனேந்தல் ஆர். ஏ. பீட்டர் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தை ஷாலினி சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.