மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அனுமதி
தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்களின் முதல் நாள் வெளியீட்டின்போது அதிகாலை 4 மணி மற்றும் 6 மணி சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. ஆனால், 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின்போது ஏற்பட்ட ரசிகர் உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலை 6 மணி காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2023-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி ‘துணிவு’ திரைப்படத்தின் அதிகாலை 1 மணி காட்சியைக் காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது, திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் சாலையில் சென்ற லாரியின் மீது ஏறி நடனமாடினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த 19 வயதான பரத் குமார் என்ற இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கும் நடைமுறை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஏழு நாட்களுக்கு காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை தினமும் ஆறு காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சனி, ஞாயிறு, தேசிய மற்றும் மாநில விடுமுறை நாட்களிலும் ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ள ‘சீன்’, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட புதிய திரைப்படங்களுக்கு காலை 6 மணி காட்சிகள் கிடைக்க உள்ளன.
தமிழ்நாடு அரசாணை கீழே…