ஜெய் பீம், உடன்பிறப்பே, ஓ மை டாக், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் – ஓடிடி வெளியீடு

நடிகர் சூர்யாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் நான்கு திரைப்படங்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 

செப்டம்பர் மாதம் முதல் மாதத்திற்கு ஒன்றாக டிசம்பர் வரை ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம்,  ஓ மை டாக்,’ ஆகிய நான்கு படங்களை வெளியிடுகிறார்கள்..

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா இன்று காலை வெளியிட்டார்.

கடந்த வருடம் கொரானோ முதல் அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட பின் தங்களது தயாரிப்பில் உருவான ஜோதிகா முதன்மைக் கதாநாயகியாக நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் மூலம் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடி வெளியீட்டை வெற்றிகரமாக ஆரம்பித்தனர்.

அதற்கடுத்து தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படமும் அதே ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது தங்களது தயாரிப்பில் உள்ள நான்கு படங்களையும் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த நான்கு படங்களைப் பற்றிய சிறு முன்னோட்டம்…

செப்டம்பர் மாதம் வெளியாகும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’

raman aandalum raavanan aandalum amazon prime

அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரு கிராமத்தைப் பற்றிய செய்தி வெளியாகிறது. ஆனால், அந்த கிராம மக்களுக்கு டிவி பார்க்க மின்சாரம் இல்லை. 35 வயதான அப்பாவி விவசாயி குனிமுத்து. கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற அவரது காளைகள் காணாமல் போய்விடுகின்றன. அவருக்கும் அவரது மனைவி வீராயிக்கும் குழந்தைகளைப் போல் அந்த காளைகள் இருந்தது. அவர் தனது நண்பர் மாந்தினியுடன் காளைகளை தேடத் தொடங்குகையில், அவர் தற்செயலாக நர்மதா என்ற நிருபரை சந்திக்கிறார். நர்மதா அவர்களுக்கு உதவ முன் வருகிறார். பெரும் போராட்டத்திற்கு மத்தியில் காளைகளை கண்டுபிடிக்க வேண்டும். கிராமத்தையும் மேம்படுத்த வேண்டும். இது நடந்ததா,  என்பதே இத்திரைப்படத்தின் கதை. 

ஒளிப்பதிவு – சுகுமார், இசை – கிரீஷ், படத்தொகுப்பு – சரவணன், கலை – முஜிபூர், உடைகள் – வினோதினி பாண்டியன்.

அக்டோபர் மாதம் வெளியாகும் ‘உடன்பிறப்பே’

udanpirappe amazon prime

இரா சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், சித்து மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் மற்றும் மாதங்கி. இவர்கள் இருவருக்கும் இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது. நீதிக்காக வன்முறை வழியில் போராட வேண்டும் என வைரவனும், சட்ட விதிகளின் படி  விடாமுயற்சியுடன் பயணிக்க  வேண்டும் என மாதங்கியின் கணவர் சற்குணமும் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கிடையேயான விரிசலை நீக்கவும், குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவும் மாதங்கி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிறது. இறுதியில் இந்த குடும்ப ஒற்றுமைக்காக மாதங்கி எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுதான் ‘உடன்பிறப்பே’. 

இசை – டி.இமான், ஒளிப்பதிவு – வேல்ராஜ், படத்தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – முஜிபூர், உடைகள் – பூர்ணிமா ராமசாமி.

நவம்பர் மாதம் வெளியாகும் ‘ஜெய் பீம்’

suriya jai bhim amazon prime

த,செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் பலர் நடிக்கும் படம்.

இது ஒரு க்ரைம் திரில்லர் படம். பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லும் படம். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராஜககண்ணு போலீசாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, பின் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே ‘ஜெய் பீம்’ கதை. 

ஒளிப்பதிவு – எஸ்ஆர் கதிர், இசை – ஷான் ரோல்டன், கலை – கே கதிர், படத்தொகுப்பு – பிலோமின், உடைகள் – பூர்ணிமா ராமசாமி.

டிசம்பர் மாதம் வெளியாகும் ‘ஓ மை டாக்’

oh my dog amazon prime

அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கத்தில், அருண் விஜய், அவரது மகன் அர்னவ் விஜய், அப்பா விஜயகுமார், மகிமா நம்பியார், வினய் ராய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குழந்தைகளின் உலகம், அவர்களின் ஆசை, துணிச்சல், தைரியம், நட்பு, நிபந்தனையற்ற அன்பு மற்றும் விஸ்வாசம் குறித்து பேசும் திரைப்படம் இது. பிறவி குறைபாடு காரணமாக ஒரு நாய்க்குட்டி அதன் எஜமானர்களால் கொல்ல உத்தரவிடப்படுகிறது. ஆனால் அது இறுதியில் கொலையாளிகளிடமிருந்து தப்பிக்கிறது. ஒரு பையன் அனைவராலும் வெறுக்கப்படுகிறான். நல்ல மாணவன் அல்ல, பக்கத்து வீட்டு அழகான பையனும் அல்ல. ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அதிர்ஷ்டக் குழந்தை. நாய்க்குட்டியும், அந்த பையனும் சந்திக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் இதயங்களை வென்று தங்களை தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கிறார்களா ? என்பதே இப்படத்தின் கதை. 

ஒளிப்பதிவு – கோபிநாத், இசை – நிவாஸ் கே பிரசன்னா, எடிட்டர் – மெகா, கலை – மைக்கேல், உடைகள் – வினோதினி பாண்டியன்.
 

Read Previous

பிரபுதேவா நடிக்கும் ‘பொய்க்கால் குதிரை’ முதல் பார்வை வெளியீடு

Read Next

ஜீ தமிழ். சர்வைவர், புதிய ரியாலிட்டி ஷோ

Most Popular